குறுமுனிக்கு பூசை
அகத்தியர் வாழ்ந்து வரும், தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர்.
தமிழ் இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் படைத்து, சித்தர்களுக்கெல்லாம், தலையாய சித்தராக விளங்கும் தமிழ் முனிவர் அகத்தியரை, இறைவனாகவே சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வணங்கி வருகின்றனர்.
அகத்தியர் வாழும் இப்பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரத்திலுள்ள அகத்தியரைத் தரிசிக்கச் செல்வதை புனிதப் பயணம் என்றும் சாகசப் பயணம் என்றும் கூறலாம்.
அபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், எங்கு காணினும் இயற்கையின் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், புல்வெளிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இப்பொதிகை மலை இயற்கை நமக்கு அளித்த கொடை.






