ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (14)


262.  கஸ்தூரீகர்ப்பமத்யஸ்தா

எல்லையற்று பரந்து, விரிந்து கிடக்கும் ஆகாச மத்தியில் விரவி, பிரக்ருதியின் செயலால் உருவாகிச் சேர்ந்து இருக்கும் ஆயிரக் கணக்கான அண்டங்களின் கூட்டினுள்ளே அலமந்து, ‎வசமிழந்து சுழன்றுகொண்டிருக்கும் ஜீவக்கூட்டங்கள் கர்ம பலனாக மேலும் மேலும் கர்பாசய பிரவேசமாகவே நிரந்தரமாக ஸம்ஸரித்துக்கொண்டே என்ன செய்வது என்று தோன்றாமல் உழலும் உயிரினங்களின் மீது இரக்கம் கொண்டு ஒரு சிறிதாவது தன்னை நினைக்கும் அகதியான ஜீவனின் கருவினுள் தானாகவே சென்று அமர்ந்து அவனது  புத்தியை தூண்டி அவனுக்கு ஆத்ம ஜ்ஞானம் ஸ்புரிக்க அநுக்ரஹிக்கும் கருணாமூர்த்தி.

263.   கஸ்தூரீவஸ்த்ரதாரிணீ

கஸ்தூரீ கந்த த்ரவ்யத்தின் சேர்கையால் அபரிதமான பரிமள மணம் வீசும் ஆடை உடுத்திய யோகினிகள் நிகழ்த்தி அற்பணிக்கும் ஆராதன க்ரமங்களை அன்புடன் ஏற்றுஅநுக்ரஹிக்கும் கருணைக்கடல்.

264.   கஸ்தூரீகாமோதரதா

யோகினிகள் உபாஸன பத்ததியினூடே ஆழ்ந்த பிரேம பூரணபக்தி பரவசத்தில் மூழ்கி ஆராதன க்ரமங்களின் ஒவொரு உபசாரத்திலும் தன்மயமாகி ஆனந்தமாக இரண்டறக்கலந்து, தம் உடல், பொருள் ஆவிஅனைத்தையும் தனக்கு அர்ப்பணித்த நிலையில் மெய்மறந்து முழுமையாக ஈடுபட்டிருப்பதைக் கண்டு களிப்படைந்து, அவர்களுடைய  சரணாகதியை ஏற்று அவர்களுக்கு ஜீவன் முக்தி அருளும் ஜகன்மாதா.

 265.   கஸ்தூரிவனவாஸினீ

தக்க குருமார்களிடம் முறைப்படி மந்ரோபதேசமும், பக்குவமான பருவ மேற்பட்ட பிறகு க்ரம தீக்ஷையும் ஸ்வீகரித்து ஸஹயோகிநிகளுடன் ஆனந்தமாகக் கூடிக்கொண்டு, சக்ர மேருவில் தன்னை ஆவாஹனம் செய்து ஸாஸ்த்ரோக்தமான பத்ததிப்படி, விஸ்தாரமாகவும் நிதானமாகவும் முழுமன ஈடுபாட்டுடன் நிகழ்த்தும் ஆராதன க்ரமங்களினூடே பிரேம பூரணமான அனன்ய சரணாகதி பாவத்துடன் லயித்திருக்கும் உபாஸகர்களுடன் இரண்டறக் கலந்து ஊடாடி ஸாதகனுடைய ப்ரஹ்மரந்த்த்தின் மத்தியில் மஹா ஸ்மஸான ஸ்தானமாகிய ஆனந்தவனத்தில் தானும் ஒரு சக யோனியாகவே கலந்து கொண்டு, விலாஸ விநோதமாகவே பல லீலைகள் புரிந்து மகிழ்ந்துகொண்டு, தன் பக்தர்களையும் மகிழ்வித்துக்கொண்டு, அவர்களுக்கு ஆத்மாஜ்ஞானமும்  சாந்தியும் பெருகின ஆனந்த வாழ்க்கையும் ஜீவன் முக்தியும் அநுக்ரஹித்து மகிழும் பெரு வள்ளல்.

266.   கஸ்தூரீவனஸம்ரக்ஷா

தன் பக்தர்கள் யோக முறையில் ப்ரஹ்ம ரந்த்ரத்தில் தன்னை ஸாக்ஷாத்கரித்து மெய்மறந்து ஆனந்த லயத்தில் மூழ்கிஇருக்கும் வேளையில் அவர்கள் அசலமாக அங்கு பொருந்தி மகிழ்ந்திருக்கும் ஸ்தானமாகிய மஹா ஸ்மஸானமெனும் ஆனந்த வனத்தில் இதர பாவங்கள் ஒரு சிறிது கூட கிட்டே நெருங்கா வண்ணம் அந்த ப்ரஹ்ம ரந்த்ர ஸ்தானத்தைக் கட்டிக் காத்து ஸாதகனின்  ஸமாதி யோகத்தை ரக்ஷித்துக் கொடுத்து மகிழும் பரம க்ரூபாநிதி.

267.   கஸ்தூரீப்ரேமதாரிணீ

ஸாதகன் தன் பால் கொண்டுள்ள அஸாமான்ய ப்ரேம ரஸம் அவனது ஹ்ருதய கமலத்தில் பொங்கி வழிந்தோட, அந்த ஆனந்தப் பெருக்கு சிறிதும் சிதறிப் போகாவண்ணம் அப்படியே நிரந்தரமாகத் தரித்து நிற்குமாறு அநுக்ரஹிக்கும் பராசக்தி.

268.   கஸ்தூரிஸக்திநிலயா

தன் பக்தன் த்யான யோகத்தில் ஆழ்ந்து நிஷ்டை கூடி ஆனந்த ஸாகரத்தில் மூழ்கிஇருக்குங்கால் அந்த ஸகுண ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரத்தில் தன் ஸக்தி ஸிவ ஸ்வரூபாநு ஸந்தான தாரணையின் ஓட்டத்தில் லயித்து நிற்கும் நிலை சலிக்காது ஸ்திரப்பட்டு, அவனுக்கு அந்த ஸமாதி நிலை நிரந்தரமாக ஸித்திக்க அருளும் பராசக்தி.

269.   கஸ்தூரிஸக்திகுண்டகா

தன் பக்தர்கள் சக்ர மேருவில் தன்னை ஆவாஹனம் செய்து விதி முறைப்படி தன்னை ஆராதித்து வரும் நிலையில் அவர்கள் ஸஹ யோகிநிகளாகக் கூடிச் செயல்படும் பொழுது அவர்களே தனது பரிவார சக்திகளாக உள்ள பாவனை கொண்டு, குண்டமாகிய அவர்களுடைய ஹ்ருதயா காசத்தில் அதி ஜாஜ்வல்யமான ஜ்யோதிஸ்ஸுடன் பிரகாசித்துக்கொண்டு அவர் களுடைய ஜ்ஞானாக்னி கொழுந்து விட்டு  எரிந்து, அவர்கள் கால்யாதி, உக்ராதி, ப்ராஹ்ம்யாதி, இந்த்ராதி தேவதை களாக  மாறி, தன்னுடைய பிந்து ஸ்தானத்தில் ஏறி நின்று தன்மயம் அடைய அருளி மகிழும் ஆனந்த மூர்த்தி.

270.   கஸ்தூரிகுண்டஸம்ஸ்நாதா

தன் பக்தர்கள் பெருவாரியாகக் குழுமி விக்ரஹத்திலோ சக்ர மேருவிலோ தன்னை ஆவாஹனம் செய்து சாஸ்திர விதிப்படி விஸ்தாரமான ஆராதன க்ரமங்களை நிகழ்த்திக் கொண்டு, அதனில் முழுமனதுடன் ஈடுபட்டு, மெய்மறந்து, லயித்திருக்கையில், குண்டமாகிய ஆகாசத்திலிருந்து மேக ஜாலமாகிய பர்ஜன்ய தேவனுடைய அநுக்ரஹ வரப் பிரசாதமாக, மழை ஜாலமாகிய அம்ருத வர்ஷமாகப் பொழிந்து, பூமியின் மீது கொட்டி நிறைந்து வழிந்தோட, தனக்கு அதுவே பெரிதும் உகந்த கங்கோதக அபிஷேகமாகக் கொண்டு மகிழ்ந்து, அவர்களை மனமார அனுக்ரஹிக்கும் மஹா ஸௌலப்யமான   ஜகன்மாதா.

271.   கஸ்தூரீகுண்டமஜ்ஜனா

ஸாதகர்கள் தன்னை ஆராதிக்கும் க்ரமங்களில் தன்மயமாக மூழ்கிஇருக்கும் வேளையில் தானே பர்ஜன்ய ராஜனாகிய மேகத்தினூடே உட்புகுந்து பெரு மழையாக் வர்ஷித்து, அவப்ருத ஸ்நாநம் போல அவர்களை முழுக்காட்டி அவர்களை ஆனந்திக்கச் செய்யும்  பெருவள்ளல்.

272.   கஸ்தூரீஜீவசந்துஷ்டா

பரமயோகிநிகளாகிய தன் பக்தர்கள் தன்னுடைய மூல மந்திரமாகிய வித்யாராஜ்ஞியின் உபாசனையில் முழு மனதுடன் ஈடுபட்டுத் தன்மயமாகி இருப்பதைக் கண்டு களிப்படைந்து அவர்களுக்கு மந்திர ஸித்தியும் பூரண ஜ்ஞானமும் ஜீவன் முக்தியும் அருளி மகிழும் பரம கருணாமூர்த்தி.

273.   கஸ்தூரீஜீவதாரிணீ

தன் பக்தர்களுடைய இன்னல்களை நீக்கி அவர்கள் நிகழ்த்தத் தலைப்படும் பூஜா க்ரமங்கள் செவ்வனே நடந்து பூர்த்தி பெற அருளி, அவர்களது த்யான நிஷ்டை சலியாமல் தரிக்கச் செய்து, அதன் மூலம் அவர்களுக்கு ஸமாதி நிலை கைகூடி, சாந்தியும் ஆனந்தமும் ஜீவன் முக்தியும் ஸித்திக்க அநுக்ரஹிக்கும் தீன தயாளு.

274.   கஸ்தூரீபரமாமோதா

தன் பக்தர்கள் யதாசாஸ்த்ரமாகவும், அனன்ய சரணாகதி பாவத்துடனும் பூரண ப்ரேம ரஸம் வழிந்தோடும் தன்மையத்துடனும், தன்னுடைய ஆராதன க்ரமங்களை நடத்துவதைக் கண்டு பெரு மகிழ்சி அடைந்து முக்தி அளித்தருளும் பெருவள்ளல்.

275.   கஸ்தூரீ ஜீவனக்ஷமா

தன் பக்தர்கள் ஏராளமாக வளமடைந்து தொடர்ச்சியாகவும் பரவலாகவும் கிளைத்துப் பெருகிச் செழிக்கச் செய்து எல்லையற்ற ஆனந்தத்துடன் வாழ்ந்து ஜீவன் முக்தி பெர அருளும் அநுக்ரஹமூர்த்தி.

276.   கஸ்தூரிஜாதிபாவஸ்தா

உத்தம யோகிநிகளின் லக்ஷணங்களையும் இயல்புகளையும் தானும் மேற்கொண்டு, தானும் ஒரு யோகிநியாகவே பழகிக்கொண்டு, அவ்அப் பொழுது அந்த அந்த கோஷ்டிகளில் தானும் பங்கேற்று, இங்கனமாக ஸஹயோகினி பாவத்துடனேயே உபாஸக-தேவதா தாதாத்ம்ய தன்மயத்வ உணர்ச்சி பொங்கி வழியும் ஸ்திதியின்  வாயிலாகவே பக்தனை ஆட்கொண்டு, அவனுக்கு ஆனந்தமும் முக்தியும் அருளும் ஜகன்மாதா.

277.   கஸ்தூரீகந்தசும்பனா

தன் பக்தர்கள் ஆத்மஜ்ஞானம் அடைவதற்கு தடையாக இருக்கும் அவர்களுடைய பூர்வ வாஸனைகளைத் துடைத்தருளும் கருணாமூர்த்தி.

(அடுத்த பதிவில் தொடரும்)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s