ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (20)

396.   கசார்ச்சிதா
தன்னுடைய கேச பாரத்தின் சோபையும் கரிய சாயலும் கொண்டு ஆகாஸ வீதியில் ப்ரகாசித்துக்கொண்டு ஸதா சஞ்சரித்துக் கொண்டே இருக்கும் மேக ஜாலங்களில் தன்னை ஆவாஹனம் செய்து ஆராதிக்கும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அருளுபவள்.
397.   கசதநு: 
எல்லையற்று பரந்து விரிந்து ஆகாச வீதியில் காண்பவர்கள் கவனத்தை ஆகர்ஷிக்கும் வண்ணம், படர்ந்த உருவத்துடன் எப்பொழுதுமே அசைந்து அசைந்து அடர்ந்து அடர்ந்து தவழ்ந்து தவழ்ந்து ஊர்ந்து கொண்டே இருக்கும் நீருண்ட மேக ஜாலங்களே தான் உகந்து உறையும் தர்ம தேவதா விக்ரஹம் என்ற ரகஸ்யமான பேருண்மையை உணர்ந்து, தன்னை அவற்றில் கண்ணாரக் கண்டு, போற்றி மனமார வழிபடும் தன் அன்பார்ந்த பக்தர்களை சிரஞ்சீவிகளாக்கி அவர்களுக்கு முக்தி அளித்து அருளும் ஜகன் மாதா.
398.   கசசுந்தர தாரிணீ
ஒரு விதமான கட்டுப்பாடும் இல்லாமல் ஏராளமாகப் பரந்து விரிந்து தொங்கும் கரிய கூந்தல் அப்படியும் இப்படியும் அசைந்துகொண்டே காண்பவர் மனதைப் பரிகொள்ளும் அழகினால் யோகியர் தலைவரான பரமசிவனையே மயக்கி வசப்படுத்திய அஸாதாரண பேரழகி.
399.   கடோரா
யாவராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத தன் அதிகூர்மையான புத்தியினால் ப்ரபஞ்சத்தில் உள்ள ஸகலமான ஜீவர்களுடைய ஹ்ருதய குஹைகளிலும் மறைந்து புதைந்து கிடக்கும் மறைமுகமான எண்ணங் களையும் மர்மங்களையும் தெரிந்துகொண்டு அவர்களுடைய மனோ பாவங்களுக்கும் கர்மபரி பாகத்துக்கும் தக்கபடி செயல் வாய்ப்புக்களும் காரிய சித்திகளும் அளித்து ஜீவ லோகங்களை பராமரிக்க பஞ்ச க்ருத்யம் செய்தருளும் இணையற்ற நிர்வாகி.
400.   குசஸம்லக்னா
எல்லா ஜீவர்களுக்கும் தாய் ஆனதால் எல்லாக் குழந்தைகளையும் பாலூட்டி வளர்க்கத் தேவையான க்ஷீரம் ஏராளமாக சுரக்கும் ஸ்தனங்கள் பர்வதம் போல் பருத்து  அடர்த்தியாகப் பெருகி, ஜீவலோகங்களை ஆளாக்கிப் போஷிக்கும் கருணையே வடிவான ஜகன்மாதா.
401.   கடிஸூத்ரவிராஜிதா
சகல ஜீவர்களுக்கும் தாய் ஆனதால் ப்ரஜனனம் ப்ருஷ்டம் ஆகிய அங்கங்களின் ஆவரணமாக அணியப்பட்ட சவங்களின் கரங்களால் ஆன மேகலையில் கோக்கப்பட்ட கடி ஸூத்திரத்தின் சௌந்தர்யத்தால் மிகுந்த சோபையுடன் பிரகாசிக்கும் பேரழகி.
402.   கர்ணபக்ஷப்ரியா
குண்டலினி யோகாப்பியாஸிகளிடம் அளவு கடந்த பிரேமை கொண்டு அவர்களுக்கு சீக்கிரமே யோக சித்தி அருளும் கருணாமூர்த்தி.
403.   கந்தா
பர்ஜன்ய ராஜனாக, அதாவது தன் பக்தனாகிய இந்திரனின் அபர ஸ்வரூபமான மேகஜாலமாக ஆவிர்பவித்து, மழை ரூபமாக தன் கருணாம்ருதத்தை பொழிந்து ஜீவராசிகளை ரக்ஷித்தருளும் ஜகன்மாதா.
404.   கதா
தானே அக்ஷர ரூபிணீயாகவும் ஜீவர்களின் வாக் ச்வரூபிணியாகவும் இருப்பதால், ஸத்யமாகவும், ஹிதமாகவும், உள்ள கருத்துக்களை அன்புக்கு பாத்திரர்களான ஜீவர்களுக்கு தாய், தகப்பன், குரு, இதர நெருங்கிய பந்து மித்திரர்கள் வாயிலாக எடுத்துரைத்து அவர்களை வழிப்படுத்தி க்ஷேமங்களை வாரி வழங்கும் லோக நாயகி.
  405.   கந்தகதி:
விண்ணின் மார்க்கமாக வெகு கம்பீரமாக  நிதானமான கதியில் அசைந்து ஊர்ந்து செல்லும் மேக ஜாலங்களைப் போல அழகிய வீறு நடையழகு கொண்டு தன் இஷ்டம்போல் உல்லாசமாக சஞ்சரிக்கும் சுந்தரவல்லி..
406.   கலி:
என்னரும் இளமையும் அழகும் மாறாத குமாரி.
407.   கலிக்னீ
தன் பக்தர்களை அழிக்க முற்படும் சத்ருக்களாகிய காமக் க்ரோதாதிகளின் ஹிம்சைகளை த்வம்ஸித்து அருள்பவள்.
408.   கலிதூதீ
தன் நாயகன் தன் மஹிமைகளின் புகழ் பரப்பக் கண்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைபவள்.
409.   கவிநாயாகபூஜிதா
ஸர்வஜ்ஞரான மஹா காளரால் லோக ஷேமார்த்தம் எல்லா பரிவார தேவதைகளும் புடை சூழ விதிமுறைப்படி ஆராதிக்கப் படுபவள்.
410.   கணகக்ஷாநியந்த்ரீ
பஞ்ச பூதங்களாலான இந்தப் பரந்த ப்ரபஞ்சத்தில்அடங்கிய பரமாணுக் கூட்டங்களின் இயக்கங்கள் யாவற்றையும் அடக்கியாண்டு  அவற்றை தானே நேரடியாகக் கொண்டு செலுத்திப் பராமரித்து அருளும் தலையாய நிர்வாஹி.
411.   காசித்
எவ்வளவு தான் முயன்று பார்த்தாலும் எவராலும் ஒரு சிறிது கூட கண்டு கொள்ள முடியாத ஸ்வரூபத் தன்மை கொண்டு உலகத்துக்கே ஒரு புதிராக எல்லோரையும் பிரமிக்க வைக்கும் அபார அதிசய மூர்த்தி.
412.   கவிவரார்ச்சிதா
கலைகளுக்கு எல்லாம் பெருநிதியாகவும் ஸர்வஜ்ஞராகவும் இருக்கும் மஹாகாளராலும் இதர ஸகல தேவ வர்க்கங்களாலும் சாஸ்திர பத்ததி ப்ரகாரம் ஆராதிக்கப் படுவதில் பெரு மகிழ்ச்சி அடைபவள்.
413.   கர்த்ரீ 
தன் இச்சையாலே தன் மாயையிநாலேயே தானே கல்பித்துள்ள இந்த மாபெரும் ப்ரபஞ்சத்தின் பஞ்ச க்ருத்யங்களின் பொறுப்பை தானே ஏற்று, அதற்கு தேவையான செயல்பாடுகள் யாவற்றையும் தானே நேரிடையாக செய்து முடித்து அதிலே மகிழ்ச்சி அடையும் அசாதாரண நிர்வாகி.
414.   கர்த்ருகாபூஷா
ஜ்ஞானத்தின் சின்னமாக தன் இடது மேற்கரத்தில் தரிக்கும் பத்ராத்மஜன்  என்ற அழகியதொரு பட்டாக்கத்தியே ஒரு அலங்கார அணிகலன் போல அமைந்து சோபிப்பவள்.
415.   கரிணீ
க்ரியா சக்தி ஸ்வரூபிணீ.
416.   கர்ணஸத்ருபா
அலரிப்புஷ்பத்தின் மீது அளவு கடந்த பிரேமை கொண்டு அந்தப் புஷ்பத்தால் அலங்காரம், அர்ச்சனை, ஹோமம் முதலியன செய்து வழிபடும் பக்தர்களை ஆட்கொண்டு அநுக்ரஹிப்பவள்.
417.   கரணேஸி
பூர்வ ஜென்மங்களின் பலன்களை இந்த ஜென்மத்திலேயே கரைத்துக் கொள்வதற்கு தகுந்த கருவியாக ஜீவனுக்கு இந்த உடம்பைக் கொடுத்து அதனில் பொருந்தியுள்ள இந்த்ரியங்களையும் மனஸ்சையும் அவ்வவற்றின் செயல்பாடுகளில் ஆற்றுவித்து அவை அனைத்தையும் கண்காணித்து இவ்எல்லாவற்றையும் கொண்டு செலுத்திப் பராமரித்து அருளும் அஸாதாரண நிர்வாஹி.
418.   காரணபா
ஜீவனின் உடம்பில் பொருந்தியுள்ள கரமேந்த்ரியங்களும் ஜ்ஞானேந்த்ரியங்களும்  தம் தம் வேலைகளைச் சரியான முறையில் செய்து முடிக்கத் தேவையான சக்தியை போதிய அளவு வழங்கி அவற்றின் இயக்கங்களை காத்தருளும்  ஜகன்மாதா.
419.   கலவாசா
மிக மதுரமாக பேசுபவள்.
420.   கலாநிதி:
எல்லாக் கலைகளுக்கும் இருப்பிடமானவள்.
421.   கலனா
தன் பக்தனுடைய பொறுப்புகளை தன்னுடயவைகளாக ஏற்று அவனுடைய ஸ்தானத்தில் தன் வ்யக்தியை அமர்த்தி அவனுடைய ஸ்வாரூபத்தையும் இயக்கத்தையும் தானே  மேற்கொண்டு அவன் இயங்குவது போலவே தான் இயங்கி அவனுடைய வாழ்க்கையில் ஹிதமானவற்றையே நிகழ்த்தி முடிவான க்ஷேமமான மோக்ஷம் அளித்து அருளும் பக்த பராதீன மூர்த்தி.
422.   கலனாதாரா
பக்தனின் ஜ்ஞான உத்பத்திக்கு காரணமானவள்.
423.   கலனா
இனிய ஒலி ஓட்டங்களில் ஊடுருவிப் பாய்ந்து விளையாடி மகிழும் நாத ரூப ஸுந்தரி.
424.   காரிகா
தன் பக்தர்களை தம் தம் கடமையான காரியங்களில் ப்ரேரித்து அவர்கள் அவற்றின் நற்பயன்களை க்ரமேண அடைந்து ஸூகிக்க அருளும் அநுக்ரஹமூர்த்தி.
425. கரா
தன் பக்தர்களுக்கு நிரதிஸய ஆனந்தம் அளிக்கும் பெரு வள்ளல்.
(அடுத்த பதிவில் தொடரும்)

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s