ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (35)

741.   காம்பில்யவாஸினீ
இந்த்ரப்ரஸ்தத்திற்கு  கிழக்கே பாஞ்சால நாட்டில் கங்கா நதி தீரத்தில் ஸர்மண்வதீ  தீரம் வரையிலும்  பரவியிருந்த காம்பில்ய நகரத்தில் கோயில்கொண்டருளி உலக மக்களை ஆட்கொண்டு அருள்பவள்.
742.   காஷ்டா
எந்த ஸந்தர்பத்திலும்  தன் பக்தன் பரமோத்க்ருஷ்டமான நிலையை அடைந்து  ஸூகிக்க அருள்பவள்.
743.   காமபத்னீ
விராட் புருஷனுடைய ஸக்தி  அதாவது  ஆதிபராசக்தி, பரமேஸ்வரனாகிய மஹாகாலரின் ஸக்தியின் வ்யக்த மூர்த்தி அதாவது தக்ஷினகாளிகா.
744.   காமபூ:
மாத்ருகைகளின் உத்பத்தி ஸ்தானம்.
745.   காதம்பரீபானரதா
த்ராக்ஷாரசத்தை பருகுவதில் பெருமகிழ்ச்சி  கொண்டவள்.
746.   காதம்பரீ
ஜ்ஞான சக்தி ஸ்வரூபிணீ யாகிய ஸரஸ்வதீ தேவதா மூர்த்தி.
747.   கலா
ஓம் என்ற சுத்த ப்ரணவத்தின் ஐந்து அங்கங்களாகிய  அ  காரம்,  உ காரம்,   ம காரம், நாதம் பிந்து என்பவற்றில் அடங்கும் ஐம்பது கலைகளில் முதல் அங்கமாகிய அ காரத்திலிருந்து ப்ரஹ்மா வினுடைய ஸக்தியுடன் தோன்றிய க  ச   வர்க்கங்களில் அடங்கும் பத்து மாத்ருகைகளாகிய பத்துக் கலைகள், இரண்டாம் அங்கமாகிய  உ  காரத்திளிருந்து விஷ்ணுவினுடைய சக்தியுடன் தோன்றிய       ட  த   வர்க்கங்களில் அடங்கும் பத்து மாத்ருகைகளாகிய பத்துக் கலைகள், மூன்றாம் அங்கமாகிய   ம காரத்திலிருந்து  ருத்ரனுடைய சக்தியுடன்  தோன்றிய   ப   ய  வர்க்கங்களில் அடங்கும் பத்து கலைகள்,  நான்காம் அங்கமாகிய பிந்துவிலிருந்து ஈ சான தேவனுடைய சக்தியுடன் தோன்றிய நான்கு கலைகள்,   ஐந்தாம் அங்கமாகிய நாதத்திலிருந்து ஸதாஸிவதேவனுடைய சக்தியுடன் தோன்றிய அ  காராதி விஸர்க்காந்தமான  :  பதினாறு ஸ்வர  மாத்ருகைகளாகிய  பதினாறு கலைகள், ஆக மொத்தம்   ஐம்பது கலைகளின் உருவில் ஆவிர்பவித்து, வித்யோபாஸகானின் வாக்கிலும், ஹ்ருதயத்திலும், புத்தியிலும் ஸாந்நித்தியமாக இருந்து கொண்டு, அவனுடைய முயற்சிகள் யாவும் வெற்றி அடைந்து, அவன் ஸக்தியும் ப்ரம்மஞானமும் ஸாந்தியும் ஆனந்தமும் அடைந்து ஜீவன் முக்தனாக நிரந்திர ஸுகம் பெற அநுக்ரஹிக்கும் பெருவள்ளல்.    
748.   காமவந்த்யா
மாத்ருகா மண்டலத்தில் அமர்ந்துள்ள ஐம்பத்தொரு மாத்ருகா ஸரஸ்வதி சக்தி  தேவதைகளிலும் ஸமஷ்டியாகவும்,  அவர்களில் ஒவ்வொரு தேவதையாக ப்ரத்யேகமாகவும் ஆவாஹனம் செய்து முறைப்படி தனித்தனியாகவும்  ஆராதிக்கப்படுவதில்  மகிழ்ச்சி கொண்டவள்.
749.   காமேஸீ
க   கார மாத்ருகையாகிய சிவ தத்துவம்   ஆ   கார மாத்ருகையாகிய ஸக்தி தத்துவம்,   ல    கார மாத்ருகையாகிய  க்ரியா  தத்துவப்ரதிபாத்யமான சகல ஐஸ்வர்ய தத்துவம்,   ஈ  காரமாத்ருகையான நித்ய த்ருப்தி  – ஸர்வ சௌக்கிய தத்துவம் ஆகிய இவைகளின் கூட்டினால் ஏற்படும் காலீ என்ற ஸப்தமே  ஒரு மஹோந்நத ஸக்திமத்தான மந்த்ரமாக உருவாகுவதாலும், க   காரத்திலிருந்தே  ஸகல மாத்ருகா  மாத்ராக்ஷரங்களும்  உற்பத்தியாவதாலும், இதனால்  மாத்ருகா மண்டலத்துக்கே அதாவது மந்த்ர  ஸாஸ்த்தரத்துக்கே  அதிஷ்டாத்ரீ  தேவதையாக தானே ஆவதாலும், மந்த்ர வித்யோபாஸன பத்ததிக்கே ஸர்வ பர அதி தேவதையாக இருந்துக்கொண்டு ஸர்வ மந்த்ரோபாஸகர்களையும் ஆட்கொண்டருளும் ஜகதீஸ்வரீ.  
750.   காமராஜப்ரபூஜிதா
மந்த்ர ஸாஸ்த்ரத்தின் அதிநாயகனும், காலி உபாசகர்களாகிய யோகிநியர்களின் தலைவனும் ஆன குபேரனாலும்,  பரமேஸ்வரனான  மஹாகாலராலும் விதிமுறைப்படி ஆராதிக்கப்பட்ட பரதேவதை.
751.   காமராஜேஸ்வரீ வித்யா
பைரவி தந்திரத்தில்பிரதிபாதிக்கப்பட்ட  ஜ்ஞான  ஸக்தியின்  வ்யக்த  ஸ்வரூபிணீ யாகிய ஹம்ஸினியாக ஆவிர்பவித்து  உபாஸகனுக்கு மந்த்ரத்தின் மூல தத்துவம் ஸ்புரிக்கச் செய்து அவனை ஜ்ஞான தேஜஸ் ஸ்வரூபியாக  திகழச் செய்யும் ஜ்ஞானாம்பிகை.
752.   காமா
மாத்ருகா மணடலத்தை தோற்றுவித்து அதனில் தானே ஊடுருவிப் பாய்ந்து அதன் மூலமாக கோடிக்கணக்கான மந்த்ரங்களை  உலகுக்கு உதவி அருளிய மந்த்ர நாத ஸுந்தரி.
753.   கௌதுகஸுந்தரீ
நாத ரூப சௌந்தர்ய  மூர்த்தியாக எப்போதுமே பேரானந்தத்தில் மூழ்கித் திளைத்து தன்னை ஆஸ்ரயிக்கும் யாவரையும் ஆனந்த மூர்த்தியாகவே ஆக்கி மகிழும் நித்ய கல்யாண மூர்த்தி.
754.   காம்போஜஜா
புன்னாக வ்ருக்ஷத்தின் புஷ்பத்தில் தானாகவே விரும்பி உறைந்து, அந்த தெய்வீகபுஷ்பமே தன் வ்யக்த  ஸ்வரூபமாக, அதநில் தன்னை ஆவாஹனம் செய்து, விதிமுறைப்படி ஆராதிக்கும் உபாஸகர்களை ஆட்கொண்டு அருளும் மந்த்ர புஷ்ப வல்லி தேவி.
755.   காஞ்சனதா
அனன்ய ஸரணாகதி பாவத்துடன்  தன்னை  சரணமடைந்து ப்ரேம  பக்தியுடன்  விதிமுறைப்படி தன்னை ஆராதிக்கும் பக்தனுக்கு ஏராளமான பொன்னும் பொருளும் வழங்கி மகிழ்விக்கும் பெருவள்ளல்.
756.   காம்ஸ்யகாஞ்சனகாரிணீ
அனன்ய ப்ரேம பக்திக்கு எப்போதுமே வசப்பட்டவளாக தன் பக்தன் மகிழ்ச்சிக்காக எதையும் செய்து கொடுப்பவள் ஆதலால், அவன் வைத்திருக்கும் வெண்கலப் பொருளைக்கூட பொன்னாக்கி அருளும் பக்த வத்சல மூர்த்தி.
757.   காஞ்சனாத்ரிஸமாகாரா
உலகில் கிடைக்கும் பொருள்களில் பொன் எப்படி ஸ்ரேஷ்டமானதோ , அங்கனமே மனிதனின் வாக்கில் எழும் ஒலிகளில் மந்த்ரங்களின் ஒலிகளே மிக்க மதுரமானதும் மிக ஸ்ரேஷ்டமானதுமாம். எனவே சர்வ மந்த்ரங்களின் ஸமூஹமே மந்த்ர மஹாமேருவாம்.  அந்த மஹாமேரு மஹா காளிகையின் ரூபமாதலால்  தேவி தக்ஷினகாளிகை யானவள் கேவலம் மந்த்ர விக்ரஹ மஹாமேரு மூர்த்தியாம்.
758.   காஞ்சனாத்ரிப்ரதானதா
தன் பக்தனை ஸர்வ மந்த்ர விக்ரஹ மஹாமேரு மூர்தியாக்கி அவனை ஸர்வ வித்யோ பாசகர்களுக்கும் பல பேருதவிகள் புரியவல்ல பரோபகார சிந்தாமணியாக ஆக்கி அருளும் மந்த்ரமூர்த்தி.  
759.   காமா
மாத்ருகாக்ஷரங்கள் ந்யாஸம் பண்ணவேண்டிய கேஸாதி பாதாந்தமான அங்கங்கள் விரவியுள்ள  ஜீவ ஸரீரம், பஞ்ச பூதங்களின் மாற்றுருப் பொருள்களே நிறைந்து, மிகப் பெரிதாகப் பரந்து விரிந்துள்ள இந்தப் ப்ரபஞ்சம், ஆகிய இவ் எல்லாப் பொருள்களிலும்  பரவலாக அமர்ந்துள்ள பரம்பொருளின் எண்ணற்ற பொறிகள் ஆகிய எல்லாமே தன்னுடைய வ்யக்திகளாக அமைந்திருப்பதாலும், இவை யாவும் மாத்ருகா ஸ்வரூபிணியாகிய தன்னுடைய வ்யக்த மூர்த்திகளாக இயங்குவதாலும், இங்ஙனமாக இந்த சராசரம் முழுமையும் மாத்ருகா மண்டலத்தின் ஒலி ஓட்டத்தின் மூலமாகவே நிர்வஹித்து அருளும் நாத ப்ரஹ்மஸ்வரூபிணீ.    
760.   கீர்த்தி
பஞ்ச  பூதங்களாலான  உடல் அழியும்;  ஆனால் ஒருவன் செய்த நற்செயல்களும் அவனுடைய குண நலன்களும் அழியா. அங்ஙனமாக,  தன் பக்தன் நீடித்த நல் வாழ்வு வாழ்ந்து  அவனுடைய  நற்செயல்களின் கீர்த்தி நாற்றிசையும் பரவி, அவன் என்றும் அழியாத புகழுடம்பு எய்தி,  உலகத்தாரின் நன் மதிப்புக்கும் நன்றிக்கும் பாத்திரமாகச் செய்து மகிழும் ஆனந்த மூர்த்தி.
761.   காமகேஸீ
எவ்வகைக் கட்டிலும் அடங்காமல் நாற்புறமும் வீசிப்பரவி சதா சுழன்று ஆடிக்கொண்டே இருக்கும்  தேவியின் கூந்தலானது ஸர்வ பந்த ரஹிதமான பரப்ரஹ்மமானது  இந்தப் ப்ரபஞ்சத்தில் உள்ள எந்தப் பொருளின் அசைவுக்கும் உட்படாமல் தானே எல்லா பொருள்களின் இயக்கத்துக்கும் மூலகாரணமாக இருந்து, அவற்றிற்கெல்லாம்  அப்பாற்பட்ட நிலையில் இருந்துகொண்டு அவற்றின் ஆதிகாரணமாக இருத்தலின் சின்னமாம்.  மற்றும் அவளது விரளமான கேஸங்கள் அநிபந்தமான வை யும் அஸம்யோகமானவையுமான  மாத்ருகைகளைக் குறிக்கும் தேவி தக்ஷினகாளிகையே மாத்ருகா மண்டலத்திற்கும் அதனை அடித்தளமாகக் கொண்ட மந்த்ர ஸாஸ்த்திரத்திற்கும் அதிஷ்டாத்ரீ தேவதை ஆதலால் ஸர்வ மந்த்ரோபாஸகர்களையும் ஆட்கொண்டு உய்வித்து அருளும் க்ருபாநிதி.  
762.   காரிகா
தானே க்ரியா ஸக்தி ஸ்வரூபிணீ  ஆவதால், தர்ம விஹிதமான லௌகிக வைதீக க்ரியா கலாபங்களைக் கடமை உணர்ச்சியுடன் செய்து முடித்து வித்யோபாஸன க்ரமங்களை விதிமுறைப்படி நிர்வர்த்தனம்  செய்து தன்னிடம் சரணம் அடையும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அருளும் க்ருபாநிதி.
763.   காந்தராஸ்ரயா
உபாசகனுடைய  தீவிரமான த்யான-ஜபத்தினூடே, அவனுடைய ப்ரேமையின் விஷயமாக, அதற்கு உரிய ஆஸ்பதமாக  உள்ள அவனுடைய  ப்ரஹ்மரந்திர ஸ்தானத்தின் பூரண  சாந்நித்யம் கொண்டு அவனுக்கு சீக்கிரமே ஸமாதி  லயம் ஸித்திக்க அருளும்  ஆனந்த மூர்த்தி.
764.   காம்பேதீ
முக்தி சாதனத்துக்கு பேரிடைஞ்சலாக உள்ள ஆறு காம க்ரோதாதி ஆறு உட்பகைவர்கள். இவற்றில் மிகக் கொடியது காமம்.   இந்தக் காமம் தன் பக்தனைக் கெடுக்காதவண்ணம் அதனை வேரோடு களைந்து அவனுக்கு சீக்கிரமே மோக்ஷம் சித்திக்க அருளும் கருணாமூர்த்தி.
765.   காமார்த்திநாஸினீ
மந்த்ர ஜபத்தின்  வீர்ய  ஓட்டத்திற்கு  பெரிய தடையாக உள்ள  காமத்தின் ஹிம்சையால் விளையும் துன்பங்களால்  வருந்தும் தன் பக்தனின் பால் இரக்கம்கொண்டு அவனுக்கு காமம் உண்டாவதற்கு ஹேதுவாக உள்ள ஸந்தர்ப்பங்களை அறவே ஒழித்து அருளும் பெருவள்ளல்.
766.   காமபூமிகா
மந்திர ஸாஸ்திரத்திற்கு  அடித்தளமான  மாத்ருகா மண்டலமே  தன் வ்யக்த ஸ்வரூபமாகக் கொண்டு  ஆவிர்பவித்து  யோகியின் ஸரீரத்தின் எல்லா அங்கங்களிலும் குறிப்பாக அவர்களுடைய கண்டத்திலும் மனஸிலும் புத்தியிலும் தன் வித்யுத் ஸக்தியை ப்ரசரிக்கச் செய்து  அவனுடைய வித்யோபாசன  முயற்சிகளை வீர்யவத்தாக  இயங்கச் செய்து அவனுக்கு ஸக்தியும்  ஜ்ஞானமும்   ஸாந்தியும் ஆனந்தமும் அருளும் பராசக்திமூர்த்தி.
(அடுத்த பதிவில் தொடரும்)    
Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s