ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (36)

767.   காலநிர்ணாஸினீ
வித்யோபாஸனமும் ஆராதன க்ரமங்களும் விதிமுறைப்படி ஸாங்கோ பாங்கமாக  நிர்வர்த்தனம் செய்து தனக்கு அர்பணித்து அனன்யமாகத் தன்னிடம் ஸரணம் அடைந்து தன் பக்தனுக்கு கால கதியால் விளையும் பிறப்பு, இறப்பு, மூப்பு, முதலான பரிணாமங்கள் எதுவும் நேரிடாவண்ணம் அவை எல்லாவற்றையும் அறவே ஒழித்து அவன் சீக்கிரமே முக்திபெற  அநுக்ரஹிக்கும் ஔதார்ய மூர்த்தி.
768.   காவ்யவனிதா
மனிதர்களுடைய மனத்தைக் கவரக்கூடிய மிக்க மதுரமான காவ்யங்களில் பெரிதும் மகிழ்ச்சி கொண்ட நய-அலங்கார கவிஞர்களுக்கும், ஸஹஹ்ருதய   ரஸிகர்களுக்கும்  தலைவி.
769.   காமரூபிணீ
வேறு எவருக்கும் இல்லாத ஆஸ்சர்யமான சௌந்தர்யம் கொண்ட பேரழகி; மேலும் தன் பக்தர்களை எந்த  இக்கட்டான ஸந்தர்பங்களிலும்  சென்று காப்பாற்றுவதற்கு தேவைப்பட்ட எந்த மாற்று ரூபமும் எடுத்துக் கொண்டு உடனடியாக அவர்களை ரக்ஷித்து அருள்பவள்.
770.   காயஸ்தா
எல்லா  ஜீவர்களுடைய  ஸரீரங்களிலும் மனஸ்ஸின் கட்டுப்பாட்டுக்கு அடங்கி இயங்கும் இந்த்ரியங்களுக்கு  அதீனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேஹத்தில் இதற்கெல்லாம் எஜமானியாக வீற்றிருந்து நடத்திச் செல்லும் அதிஷ்டாத்ரீயான பரமாத்மஸ்வரூபிணீ.
771.   காமஸந்தீப்தி:
மாத்ருகா மண்டலத்தில் அமர்ந்துள்ள மாத்ருகைகளின் கூட்டமைப்பினால் உருவாகும் மந்த்ரங்களை உபாஸிக்கும் தன் பக்தர்களின் புத்தியை தீட்டித் தூண்டி அவர்களுடைய மந்த்ர  ஜப க்ரமம் வீர்யமடையச்செய்து சீக்கிரமே அவர்கள் உபாஸிக்கும்  மந்த்ரங்கள் ஸித்தித்து பலன் அளிக்க அருளும் கருணாமூர்த்தி.      
772.   காவ்யதா
அஸாதாரணமான  அதி ஆஸ்சர்யமான  கவன ஸக்தியை தன் பக்தர்களுக்கு வழங்கி மகிழும் பெருவள்ளல்.
773.   காலஸுந்தரீ
ஆதிநாதரான ஸ்ரீ மஹாகாலருக்கு என்றும் தணியாத ஆனந்தத்தை மழையென பொழியும் அவருடைய ப்ராணநாயகி.
774.   காமேஸீ
தானே மாத்ருகா மண்டலத்தில் அமர்ந்துள்ள எல்லா மாத்ருகா ஸக்திகளின் ஸ்வரூபிணீ யாவதாலும் அது காரணம் பற்றி அவர்களின் இயக்கத்தைக் கொண்டு செலுத்துபவள்  தானே ஆவதாலும், ஸர்வ மந்த்ரங்களுக்கும் வீர்யமான கதி உண்டாக்கி, வித்யோபாஸகர்களுக்கு அவைகள் ஸக்திமத்தாக நற்பலன்கள் அளிக்கச் செய்பவள்,  அதாவது ஸர்வ மந்த்ர நாயகி ஆவதாலும் மேலும் ஸர்வ மாத்ருகைகளையும் தன் வ்யக்த ஸரீரத்தின் அங்கங்களில் தரித்துக்கொண்டு  அவற்றில் தன் வித்யுத் ஸக்தியை ப்ரஸரிக்கச்செய்து, தன் நடன அசைவுகள் மூலமே அவற்றை க்ரமேண எல்லா ப்ரயோகங்களிலும் இயக்கி அவற்றிற்கு பூரண ஸக்தி அளித்து அருளும் ஜகதீஸ்வரீ.
775.   காரணவரா
தானே க்ரியா ஸக்தி ஸ்வரூபம் ஆவதால் ஸர்வ ஜந்துக்களையும் அவற்றிற்கு தேவையானவையும் அவசிய மானவையுமான ஸகல க்ரியா கலாபங்களையும் செவ்வனே செய்து முடிக்கத் தேவையான உத்சாஹமும், வீர்யமும் அளித்தருளும் காருண்ய மூர்த்தி.
776.   காமேஸீபூஜனோத்யதா
மாத்ருகா மண்டலத்திற்கு அதிஷ்டாத்ரீ தேவதையாக அதாவது மாத்ருகா ஸரஸ்வதீ தேவியாக அதாவது ஸர்வ மந்த்ர வ்யக்த ஸ்வரூப தேவதையாக ஆவாஹனம் செய்து, விதிமுறைப்படி ஆராதனம் செய்து அனன்யமாகத் தன்னை சரணம் அடையும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு சீக்கிரமே மந்த்ர ஸித்தியும் யோக  ஸித்தியும் முக்தியும் அளித்தருளும் மந்த்ர மூர்த்தி.
777.   காஞ்சீநூபுரபூஷாட்யா
பழவினைப் பயனுடனேயே ஜந்துக்கள் பிறப்பதாலும், வினைப்பயனுடனேயே அவைகள் இறப்பதாலும், தேஹம் அழிந்த பிறகு தன் ஊழின் தொடர்சியுடனேயே புனர் ஜன்மம் அடைவதாலும், இங்ஙனமாக கர்மபல தொடர்ச்சியே ஜென்மங்களுக்கு காரணமாவதாலும், காரியங்களைச் செய்யும் அங்கமாகிய கரங்களைக் கோத்த மேகலையை தன் இடுப்பில் தரிப்பதன் மூலம், கர்ம பலத் தொடர்ச்சி இனி தன் பக்தனுக்கு கிடையாது என்ற ஸூஸனையின் சின்னமாக அத்தகைய மேகலையைத் தான் தரித்தும், ஸஞ்சாரம் செய்யும் அங்கமாகிய பாதத்தில் ஸர்ப்பங்களை தரிப்பதன் மூலம், குண்டலினி யோகாப்யாசத்தால் தன் பக்தன் இனி ஸம்ஸாரச் சூழலில் சிக்குண்டு, அலைந்து திரிந்து உழல்வது அற்றுப்போய்விட்டது என்றும், யோகிகள் கர்ம பல த்யாகத்தின் மூல முக்தி ஸாதனம் மிக எளிதாக அடைவதைத் தெரிவித்து, தன் பக்தன் அதன் தெளிவால் சீக்கிரமே முக்தி அடைய அருளும். ஜ்ஞாநாம்பிகை.
778.   குங்க்குமாபரணாந்விதா
ஸ்வர்ணாதி லோஹங்களாலும்  முக்தா-ப்ரவாள-வஜ்ர-வைடூர்யாதி ரத்னங்களாலும்  அமைக்கப்பட்ட பூஷன வகைகளில் சற்றும் விருப்பமின்றி கேவலம் கர வீராதி புஷ்பங்களாலும் சிறந்த ஹரித்ரா குங்குமத்தாலும் ஆன அலங்கார வகைகளே தனக்கு உகப்பாக ஏற்று மகிழ்பவள்.
779.   காலசக்ரா
ஆதியும் அந்தமும் இல்லாமல் காலத்தின் பல கட்டங்களில் பாகுபாடுகள், சக்ரம் சுழல்வதுபோல் திரும்பித் திரும்பி முடிவில்லாமல் ஸதா சுழன்றுகொண்டே இருக்கும்  காலகதி நிலைக்குக் காரணமானவள் காளிதேவியே.
780.   காலகதி:
எந்தக் காலத்திலும் எந்த நிலையிலும் யாவர்க்கும் கடைசியாகப் புகலிடம் காளியை தவிர வேறு எவரும் இலர்.  ஸ்ரீ மஹாகாலரே தேவி தக்ஷினகாளிகையே தனக்கு சரணம் என்று, தான் எவ்வித பொறுப்பும் இல்லாமல், அவளே இயங்கி, இந்தப் ப்ரபஞ்ஜத்தின்  பஞ்ஜ க்ருத்யம் செய்து நிர்வஹிப்பதையும், அந்தப் பெரு மகிழ்ச்சியில் தொடர்ந்து நடனம் செய்துக்கொண்டே ஸுகிப்பதையும் கண்டு, எல்லை இல்லாத ஆனந்தத்தில் மூழ்கி  ஸாந்தமாக  இருக்கிறார்.
781.   காலசக்ரமனோபவா
பல கால கட்டங்களை அங்கங்களாகக் கொண்டு ஒய்ச்சல் இல்லாமல் சுழன்று கொண்டே இருக்கும்  காலச் சக்கரமே தன் வ்யக்த ஸரீரமாகக் கொண்ட  ஸ்ரீ மஹாகாலரின்  மனதில், எப்பொழுதுமே நிரந்தரமாக தன்னை ஆஸ்தானித்துக்கொண்ட கால ஸக்திமூர்த்தி.
782.   குந்தமத்யா
மல்லிகை புஷ்பத்தின் கர்ணிகையில் உறைந்து மகிழ்பவள்.
783.   குந்தபுஷ்பா
மல்லிகை மலரே தன்  வ்யக்த தேஹமாகக் கொண்டு, அம்மலரால் தன்னை அர்சிக்கும் தன் பக்தனை  ஆட்கொண்டு அருள்பவள்.
784.   குந்தபுஷ்பப்ரியா
மல்லிகைப் புஷ்பத்தில் அளவு கடந்த ப்ரியம் உள்ளவள்.
785.   குஜா
யோகியின் மூலாதார ஸ்தானத்திலிருந்து  எழும்பி ஸுஷும்ணா நாடி வழியாக அந்த உபாஸகனை மேல் நோக்கி ஸ்வாதிஷ்டானம் மணிபூரகம் முதலிய ஆதார சக்ர தளங்களினூடே அழைத்துக் கொண்டு, பெற்ற தாய் போலவும், உற்ற தோழி போலும் ஆருதலும், உத்சாகமும், ஊக்கமும் அன்பையும் வர்ஷித்து, இவ்வாறு ஸஹஸ்ராரம் வரை கடந்து ப்ரஹ்மரந்த்ரம் சென்றடைந்து, அங்கு  சந்திரனின் அம்ருத தாரையின் சேர்க்கையால் ஆனந்த அனுபவத் தொடர்ச்சி பெற்று, அங்கு குரு ஸ்வரூபத்தில் உள்ள இஷ்டதேவதையின் ஸாந்நித்யமும் கடாக்ஷமும் கிடைக்கப்பெற்று ப்ரஹ்மானந்தத்தில் திளைத்து ஸமாதி நிலை எய்தப்பெற்று நித்ய ஸுகம் அடையச் செய்து அருளும் ” பரநாரீ” என்று சிறப்பித்துக் கூறப்படும் குண்டலினி ஸக்தியாகிய பராஸக்தி மூர்த்தி.  
786.   குஜமாதா
யோகாப்யாஸத்தில் ஆழ்ந்து மெய்மறந்து தன்மயத்வ  நிலையில் ஊன்றி இருக்கும் உபாஸகனை, பெற்ற  தாய்மை பாவத்திலேயே  ஆதரித்து இஷ்ட தேவதா விக்ரஹவானாகவே ஆக்கி ஆட்கொண்டு அருளும் ஜகன்மாதா.
787.   குஜாராத்யா
தன்னை குண்டலினி ஸக்தியாகவே உணர்ந்து தன்னை அந்த ரூபத்திலேயே உபாசித்து மானஸீகமாக ஆராதிக்கும் பக்தனை ஆட்கொண்டு அருள்பவள்.
788.   குடார வர தாரிணீ
தன் பக்தன் ஸம்ஸாரமாகிய கஹனமான காட்டில் சிக்குண்டு அவதிப் படுவதைப் பார்த்து அவனை விடுவித்தருள திருவுள்ளம் கொண்டு குருவின் உபதேசம் என்ற பெரும் கோடரியால் அவனை மயக்கி வரும் மாயாவ்ருக்ஷ்ஷத்தை அடியோடு வெட்டிக் களைந்து அவனுக்கு மோக்ஷம் சித்திக்க அருளும் பரம கருணாமூர்த்தி.
789.   குஞ்சரஸ்தா
உபாஸகனின் ஹ்ருதயத்திலும் ப்ரஹ்மரந்த்ர ஸ்தானத்திலும் ஸ்திரமாக நின்று அவனது புத்தியின் தார்ட்யத்தையும் யோகத்தின் வலிமையையும் காத்துக் கொடுக்கும் யோக குஞ்ஜரீ மூர்த்தி.  
790.   குஸரதா
ஸமுத்திர, நதி, தடாக, ஜலஸயங்களில் நிரம்பியுள்ள ஜலத்திலும், சுத்த ஜலத்தை மழையாக வர்ஷிக்கும்  மேக ஜாலங்களில் பூரணமாக இருக்கும் பாஷ்பாமயமான  ஜலத்திலும் உகப்பாக விரும்பி உறைபவள் ஆவதால் தன்னை பூர்ண கும்பத்தில் நிரப்பின  ஜலத்திலோ அல்லது மேற்கூறிய ஜல சமுத்திரங்களிலோ நேரிடையாக ஆவாஹனம் செய்து விதிமுரைப்படி ஆராதிக்கும் தன் பக்தனை ஆட்கொண்டு அருள்பவள். மேலும் குஹ என்ற சொல் அருகம்புல்லைக் குறிக்கும்.  காளிகை அருகம்புல்லில் விரும்பி உறைவதால், அருகம்புல்லை தன் மூல மந்த்ரத்துடன் அக்னியில் ஆஹுதி செய்யும் பக்தனை ஆட்கொண்டு அருள்பவள்.
791.   குஸேஸயவிலோசனா
தன் பக்தன் யோகாப்பியாஸத்திநூடே மூலாதாரம் முதலிய கமலங்களில் முழுமையான மனோலயத்துடன் சிறிது சிறிதாக  மேலும் மேலும் ஏறிக்கொண்டே சென்று ஸஹஸ்ரதள கமலத்தின் மத்தியில் ப்ரஹ்மரந்த்ர கமலத்தின்  கர்ணிகையில் ஸ்திரமாக அமர்ந்து அஸஞ்சலமாக, குரு ஸ்வரூபிணீயாகிய இஷ்டதேவதையின் கடாக்ஷாம்ருத பானத்தில் திளைத்து தேவதா  தாதாத்ம்ய  பீயுஷத்தில் மூழ்கி குரு பாதுகையில் இரண்டறக்கலந்து சாக்ஷாத் காலிமயமாகும் நிலையை அடைய கண்காணித்து அருளும் குண்டலினி ஸக்தியாகிய பராஸக்திமூர்த்தி.
(அடுத்த பதிவில் தொடரும்)
Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s