ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (42)

901. குகதிக்னீ
துர் மார்க்கமான நடத்தை உள்ளவர்களைத் தக்கபடி தண்டித்து அவர்களைத் தூய்மைப் படுத்தும் வேத நாயகி
902.  குபேரார்ச்யா 
சகல அண்டங்களின் ஸமுதாயங்களுக்கும், அவற்றில்  அமர்ந்துள்ள எல்லா சேதனா சேதன ப்ரக்ருதிகளுக்கும் தாய் தந்தையர் களான பார்வதி பரமேஸ்வரர்களை ஸதாகாலமும் நிரந்ததரமாக ப்ரேமையுடன் ஆராதித்துக்கொண்டே இருக்கும் குபேரதேவன் யக்ஷர்களின் தலைவன்.  குறிப்பாக அவனே தக்ஷினகாளிகையின் மிகச் சிறந்த ஓர்  உபாஸகன். மேலும் தக்ஷினகாளிகையின் ஒரு தனி சிறப்பான மூர்த்தி பேதமாகிய குஹ்ய காளிகையைச் சிறப்பாக அனவரதமும் உபாஸிக்கும் ஸ்ரேஷ்டமான வித்யோபாஸகன்.   அப்படிப்பட்ட உத்தம உபாஸகனான குபேரனால் தன் பரிவாரங்களான யக்ஷ யக்ஷினிகள் புடைசூழ எப்பொழுதுமே மிக விஸ்தாரமாக ஆராதிக்கப்படுபவள்.
903.   குசபூ :
ஒரு சிசு தன் தாயினிடம் ஸ்தன்யபானம்  பண்ணிக்கொண்டே அம்ருதத்துக்கு ஒப்பான   தாய்ப்பால் உண்டு சௌக்கியம்  அடைவது போல் தன் பக்தர்கள் தன் மூல மந்த்ரத்தை ப்ரேம பக்தியுடன் ஜபிக்குங்கால் உடனே மோக்ஷம் அளிக்க வல்ல ப்ரஹ்மஞானத்தை அவர்களுக்கு அளித்து அருளும் ஜகன்மாதா.
904.   குலநாயிகா
குலஸாதகர்களால் உபாஸிக்கப்படும் இஷ்ட தேவதையாக மட்டும் இல்லாமல் அவர்கள் தோன்றிய குலத்தையே தலைமுறை தலைமுறையாக காப்பாற்றி அருளும் பெருவள்ளல்.
905.   குகாயனா
தன் வித்யோபாஸகர்களுடைய மூலாதார ஸ்தானத்திலிருந்து உத்பத்தி யாகும் “பரா” வாக் ரூபமாக எழும் நாதமானது “[பஸ்யந்தி”  “மத்தியமா” நிலைகளை தாண்டி “வைகரீ” நிலையில் வெளிக்கிளம்பி கேட்பவர் காதில் பேரானந்தம் அளிக்கும் மஹா ரஸவத்தான கானமாக விழும் இசை வடிவில் பரவி யாவரையும் மகிழ்விக்கும் நாதப்ரஹ்ம ஸ்வரூபிணீ.
906.   குசதரா
தன் குழந்தைகளாகிய ஜீவர்களுக்குத் தன் ஸ்தன்யாம்ருதமாகிய ஸக்தி, ஞானம், ஆனந்தம், ஸாந்தி,   ஆகியவற்றை வரையாது பொழிந்து, அவர்களுக்கு தன் அநுக்ரஹப் பயனாகிய ஜீவன் முக்தி நிலையை வழங்கி அருளும் அநுக்ரஹமூர்த்தி.
907.   குமாதா
பூமி முதலான எல்லா லோகங்களுக்கும் அதாவது எல்லா அண்டங்களுக்கும் தாயாக இருந்துக்கொண்டு எல்லா ஜீவ ஸமூஹங்களும் வாழும் இந்தப் பரந்த ப்ரபஞ்ஜத்தையும் பஞ்ச  க்ருத்ய கலனம் செய்து அருளும் ஜகன்மாதா.   
908.   குந்ததந்தினீ
மல்லிகை புஷ்பம் போல் அழகிய பற்கள் கொண்ட பேரழகி. “குந்தம்” என்ற வர்ஷபர்வதம் போல் மஹா வலிமை கொண்ட பற்கள் கொண்ட பராசக்தி மூர்த்தி.
909.   குகேயா
தன் வித்யோபாஸகனின்  மூலாதாரத்திலிருந்து எழுந்து  “பரா”  “பஸ்யந்தி” “மத்தியமா”  ஸ்திதி களைக் கடந்து அவனது முக குஹரத்திலிருந்து “வைகரீ” நிலையில் வெளிக்கிளம்பி காற்றில் பரவிப் பெருகுகையில், ஸாமவேதம் முதலான பல  ரூபங்களான வாஸகர்களிநூடே விரவி, மிக்க இனிமையான ஒலிச்செரிவும், மிக ஆழமான கருத்துச் செறிவும் கொண்டு  கேட்பவர்கள் காதில் மஹோந்நதமான இசை வடிவாகப் பாய்ந்து அவர்களுக்கு பேரானந்தம் அருளும் நாத ப்ரஹ்ம ஸ்வரூபிணீ. 
910.     குஹராபாஸா
குண்டலினி யோகம் அப்யஸிக்கும் பக்தனின் குண்டலினி ஸக்தியின் எழுச்சி ஹ்ருதய குஹையிலிருந்து மேலே எழும்பி கண்டத்தை அடைந்து அங்கிருந்து இனிய நாத வடிவில் அவனுடைய முஹ குஹரத்திநூடெ வைகரீ வாக் ரூபமாக வெளிக்கிளம்பி கேட்பவர்கள் காதில் நாதாம்ருதமாக வந்து விழுந்து ஆனந்தம் அளிக்கும்போது, நாதத்தின் ப்ரகாஸ வடிவில் ஒளிரும் நாத ப்ரஹ்ம ஸ்வரூபிணீ. 
 911.      குகேயா
தன் வித்யோபாசகனுடைய குண்டலினி எழுச்சியின் ஸக்தி வடிவினளாக அவன் அப்யசிக்கும்  வித்யாராஜ்ஞீயின் ஒலி ஓட்டத்தில் ஊடுருவி அந்த நாதத்தில் அவன் லயித்து அவனுக்கு நாத வடிவினனாகவே அவ்விடத்தில் குருஸ்வரூபிணீயாக வீற்றிருக்கும் தன்னுடைய பாதுகையில் ஒன்றி லயித்து, நாத லய யோகத்தில் நிலைத்து அந்த ஆனந்தத்தில் மூழ்கி, குருவாகிய தன்னுடைய கடாக்ஷம் பெற்று அங்கேயே நாத ப்ரஹ்மானந்த வடிவினனாக நிலை பெற்று நித்ய சுகம் பெற அருளும் நாதரூப ஸுந்தரி.   
912.   குக்னதாரிகா
தன் பக்தனுடைய பாபங்களையும் கழ்டங்களையும் அழித்தருளும் மஹாமங்கள ஸ்வரூபிணீயான பராஸக்தி மூர்த்தி. 
913.   கீர்த்தி:
தன்னுடைய மூலமந்த்ரமாகிய வித்யாராஜ்ஞீயை ந்யாஸ பூர்வமாகவும் த்யான ஜபங்கள் மூலமாகவும் நன்கு உணர்ந்து விதிமுறைப்படி உபாசிக்கும் தன் பக்தனுக்கு இஹபர சுகங்களும், மகிழ்ச்சியும், நற்கீர்த்தியும் மந்த்ர ஸித்தியும் ஜீவன் முக்தியும் அளித்தருளும் பரமானந்த மூர்த்தி.
914.  கிராதினீ
துஷ்ட நிக்ரஹ ஸிஷ்ட  பரிபாலனம் செய்து உலகங்களை காக்கும் வாயிலாக பல வகை ரூபங்கள் கொண்ட பல அவதாரங்கள் எடுத்து ஒரு ஸமயம் துர்க்கையாகவும், மற்றொரு ஸமயம் வேடிச்சியாகவும் ஆவிர்பவித்து அருளியவள்.  
915.   க்லின்னா
அவ்வப்போது எந்த ஸந்தர்பங்களிலும் ஹ்ருதயத்தில் கருணாதி ரஸங்கள் பொங்கி வழிந்தோட அன்பு ரஸ  மயமாகவே இயங்கி  ஜீவர்களை ஆட்கொண்டு  அருள்பவள்.
916.   கின்னரீ
உத்தம யோகீஸ்வரனான குபேரனுடைய பரிசர வர்கங்களில் சேர்ந்தவர்களும் புலஸ்த்ய மஹர்ஷியின் வம்ஸத்தில் உதித்தவர்களும் குதிரை முகம் கொண்டவர்களும் ஆன கின்னர ஸ்த்ரீகளுள் ஒருத்தியாக தான் ஆவிர்பவித்து தானும் ஒரு கின்னரியாகவே பழகிக்கொண்டு அந்த மஹா யோகீஸ்வரனான குபேரனுடைய ஆராதன க்ரமங்களை மனப்பூர்வமாக ஏற்று அவர்களை ஆட்கொண்டு அருளும் சௌலப்பியமூர்த்தி.  
917.   க்ரியா
குபேரனுடைய பரிசர வர்க்கங்களில் சேர்ந்த ஒருவகை தேவஜாதிப் பெண்மணியாகிய கின்னரி நிகழ்த்தும் உபாஸன ஆராதன க்ரமங்களில் பெரிதும் மகிழ்ச்சி கொண்டு அவர்களை ஆட்கொண்டு அருளும் சௌலப்யமூர்த்தி.
918. க்ரீம்காரா   
மாத்ருகா மண்டலத்தில் அமர்ந்துள்ள ஐம்பத்தொரு மாத்ருகைகளிளிருந்து ஸக்தி-ஸிவ தத்துவத்தை ப்ரதிபாதிக்கும் சிறப்பான  பீஜமாக க்ரீம் என்ற பீஜத்தை நமக்கு உருவாக்கிக் கொடுத்த பராஸக்திமூர்த்தி.  மேலும் அந்த பீஜத்துக்கு உரியவள் அவள் ஒருத்தியே.
919.   க்ரீம்ஜபாஸக்தா
ரஸஜ்ஞா என்ற சிறப்புப் பெயர் கொண்ட காலி பீஜமாகிய க்ரீம் காரத்தை பிரேம த்யானத்துடன் தாதாத்ம்ய பாவத்துடனும் ஜபிப்பதிலே கண்ணும் கருத்துமாக உள்ள உத்தம யோகிநியாகிய  தன் பக்தனுடைய வ்யக்தியிலேயே தான் பூர்ண ஸாந்நித்யம் கொண்டு அவனை ஆட்கொண்டு அருளும் தன்மயத்துவ மூர்த்தி. 
920.   க்ரீம்ஹூம்ஸ்த்ரீம்மந்ரரூபிணீ 
க்ரீம்  ஹூம்  ஸ்த்ரீம்  ஆகிய இம் மூன்று பீஜங்களின் கூட்டாய் உருவாகும் சிறந்த மந்த்ரமே தன் ஸ்வரூபமாகக்  கொண்ட மந்த்ர ரூபிணீ.
921.   க்ரீம்மீரிதத்ருஸாபாங்கீ
பொதுவாகக் கருணா ரஸமே வடிவான ஜகன்மாதாவாயினும் ஜீவர்களுடைய பல தரப்பட்ட எண்ணங்களையும் நடத்தைகளையும் செயல்களையும் கண்ணுறும் பொது, சில சமயங்களில் ஆதரவு, சில சமயங்களில்  “ஆகா இப்படியும் இழிந்து போகிறானே” என்ற வருத்தம், சில சமயம் அதிகக் கடுமையான குற்றம் செய்பவர்களைக் கண்டு கோபம்  – இங்ஙனம் பலதரப்பட்ட கண்ணோக்கு கொண்டு ஜீவ ஸமூஹங்களை காண்பவள்.
922.   கிஸோரீ
எப்பொழுதும் இளம் பெண் உருவத்திலேயே அதாவது குமாரியாகவே இருந்துகொண்டு எந்த சூழ்நிலையிலும் லீலா விநோதமாகவே பழகிக்கொண்டுதன் குழந்தைகளாகிய எல்லா ஜீவா வர்க்கங்களையும் ஆட்கொண்டு அருளும் ஜகன்மாதா.
923.   கிரீடினீ
யோகியர்களின் ப்ரஹ்மரந்ர ஸ்தானங்களாகிய ஸிரஸ்சுகளைக் கோத்த முண்ட மாலையைத் தன் கண்டத்தில் தரித்து யோகத்தின் மஹோந்நதமான சிறப்பைத் தன் பக்தர்கள் நன்கு உணரச்செய்யும் யோகேஸ்வரி.
924.   கீடபாஷா
ஸாமவேதம் முதலான   தெய்வீக கானம் செய்யும் காயகர்களின் வாக்கில் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் உறைந்து ஆட்கொண்டு அருளும் கருணாமூர்த்தி. 
925.   கீடயோனி
காயகர்களின் குலத்தில் தான் உதித்து அவர்களைப் போல தானும் ஒரு காயகியாக கானம் செய்து தன்  மதுர கானத்தால் எல்லோரையும் மகிழ்விக்கும் ஆனந்தமூர்த்தி.    
926.   கீடமாதா
ஜீவர்களுக்கு பரமாத்மாவின் குண நலன்களை உணர்த்துவதற்கு பஞ்ச ஜ்ஞானேந்த்ரியங்களும் மிக்க ஸக்திமத்தான கருவி செவியே.  செவியின் மூலமாக ஜீவனின் புத்தியை எட்டி ஊக்குவிப் பதற்கு கானமே மிக வீர்யம் உள்ளது. கானத்தில் உத்தமமானது ஸாமதானம்.  சிறந்த ஸாமர்களை உலகத்துக்குப்  பேருபகாரமாக ஈன்றருளும் வேத மாதா தேவி தக்ஷினகாளிகையே.  
927.   கீடதா
ஹா ஹா ஹூ ஹூ, சித்திரசேனன், சித்ரரதன், விஸ்வாஸூ, நாரதர், தும்புரு, கம்பலன், ஆஸ்வதரன், ஆஞ்சநேயர், வால்மீகி, முதலிய உத்தம காயகர்களை ஸ்ருஷ்டித்து உலகுக்கு ஈந்தருளிய பெருவள்ளல். 
928.   கிம்ஸுகா
சிவந்த முகத்தைக்கொண்ட கிளி எப்படி இனிக்கப்பேசுகிறதோ, அதேபோல் சிவந்த நாக்கு வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் காளியின் வாக்கிலிருந்து முத்து முத்தாக உதிரும் மிக்க மதுரமான ஆதரவுச் சொற்கள் பக்தர்கள் காதில் இன்ப நாதமாக விழுந்து அவர்களுக்கு பேரானந்தத்தை மழையென வழங்கி மகிழ்விக்கிறது.
929.   கீரபாஷா
தன் பக்தர்கள் பால் உள்ள அன்பின் பெருக்கால் அவர்களை ஆதரித்து அவள் பேசும் பேச்சானது,  கிளி கொஞ்சிக் கொஞ்சி மழலையாகப் பேசுவது போல் தனது மிக்க இனிமையான பேச்சால் யாவரையும் மிக மகிழ்விப்பவள்.
930.   க்ரியாஸாரா
க்ரியா  ஸக்தியின் வ்யக்த ஸ்வரூபமாகவே தோன்றி அருளியவள்.
931.   க்ரியாவதீ
க்ரியா ஸக்தி தத்துவத்தின் ப்ரதிபாதகமாக, ஸவங்களின் கரங்களைக் கோத்த மேகலையை இடுப்பில் தரித்திருப்பவள். 
(அடுத்த பதிவில் தொடரும்.)
Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s