ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (45)

   
980.   கோதண்டதாரிணீ
தர்ம ஸ்தபனத்திற்காக  துஷ்ட நிக்ரஹ ஸிஷ்ட பரிபாலனம் செய்வதற்காக, பண்டாதி அசுரர்களை ஸம்ஹரிப்பதற்காக  துர்க்கையாக அவதரித்து  கையில் ததுஸ் தரித்து அவர்களுடன் கோர யுத்தம் செய்து அரக்கர்களை அழித்தருளிய ஈடு இணையற்ற வீராங்கனை.
981.   க்ரௌஞ்சா
பாலும் ஜலமும் கலந்திருக்கும் நிலையில்  பாலை மட்டும் க்ரஹித்து  நீரை நீக்கவல்ல அன்னப் பறவை போல் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஸாரமான அம்ஸத்தை மட்டும் க்ரஹித்து அஸாரமான விஷயங்களை புறக்கணித்து ஸம்பந்தப்பட்டவர் களில் தார்மிகப் போக்கு உள்ளவர்களை ஆதரித்து அவர்களை ஆட்கொண்டு அருளும் பரமஹம்ஸ குருமூர்த்தி. 
982.   கௌஸிகா
அபிஷேக அர்ச்சனாதி உபசார வரிவஸ்யா  க்ரமங்கள் நிகழ்த்துங்கால் மிக முக்கிய  அங்கமாக தயாரித்து அர்ப்பணிக்கப்படும்  ஸக்ஷகம் என்ற  பான பாத்திரத்தில் விசேஷ விருப்பம் உள்ளவள்.
983.   கௌலமார்க்ககா
உத்தம வித்யோபாஸகர்களின் ஆராதன க்ரம  ஆசார விசேஷங்களைப் பெரிதும் மகிழ்ச்சியுடன் ஏற்று அவர்களை ஆட்கொண்டு அருளும் காருண்ய மூர்த்தி.  
984.   கௌலினீ
உத்தம வித்யோபாஸகர்களான குல ஸாதகர்களின் பரம்பரையில் ஒழுகப் பட்டு வந்த அநுஷ்டான ஆசார  விசேஷங்கள் ஆதியில் பரமசிவனால் துவக்கப்பட்டுஆசாரிக்கப்பட்டு வந்திருக்கின்றமையினால்  அவரே ஆதி கௌலாஸார அநுஷ்டாதா ஆவதால் அந்த அநுஷ்டான  ஆசார பத்ததியிலேயே பெரிதும் மகிழ்ச்சி கொண்டு அத்தகைய உத்தம அதிகாரிகளை ஆட்கொண்டு அருள்பவள்.   
985.   கௌலிகாராத்யா
உத்தம வித்யோபாஸகனாகிய குல ஸாதகர்களால் தம் ஸஹ யோகிநிகளின் புடை சூழ ஸாஸ்த்ர   விதிமுறைப்படி ஆராதிக்கப்படுபவள்.
986.   கௌலிகாகாரவாஸினீ
உத்தம வித்யோபாஸகர்கலாகிய குல சாதகர்கள் நிகழ்த்தி  அர்ப்பணிக்கும் ஆராதன க்ரமங்களில் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து அவர்களுடைய க்ருஹங்களிலேயே தொடர்ந்து ஸாந்நித்தியம் கொண்டு அங்கேயே நித்யவாசம் செய்து அருள்பவள்.
987.   கௌதுகீ
கொஞ்சம் கூட இதர உணர்சிகளின் கலப்படமில்லாத மனதில் பெருவெள்ளம் போல் எப்போதுமே இடையறாது சுரந்து பெருகிக் கொண்டே இருக்கும் ஆனந்தம் பொங்கி வழியும் ஆனந்த மூர்த்தி. 
988.   கௌமுதீ
மந்த்ர ஸாஸ்தரத்தின் சக்ரவர்த்தியாகிய சந்திரனுடைய ஜ்யோதீஷ்கிரண ஜால வீச்சு பரவலாக நிலவி ஜீவ ஸமூஹங்களை  எல்லாம் மகிழ்விக்கும் ஜ்யோத்ஸ்னா என்ற சிறப்புப் பெயர் கொண்ட சந்திரிகா வடிவில் ப்ரகாசிக்கின்ற ஜ்யோதிஸ் ஸ்வரூபிணீ. அதுவும் ஸரத் ருதுவில் அதாவது ஐப்பசி  மாதத்திலும் கார்த்திகை மாதத்திலும் நேரும் பௌர்ணமி திதியன்று இரவில் ப்ரகாசிக்கும் பூர்ண சந்திரனின் ஈடு இணையற்ற ஒளியான நிலவு ரூபத்தில்  ஒளிரும் ஸரத்சந்த்ரிகா வடிவில்   ஜ்வலிக்கும்  காந்திமதி.   
989.   கௌலா
உத்தம வித்யோபாஸகனான  ஒவ்வொரு குல ஸாதகனும் தேவதாமயமாகவும் குரு தாதாத்ம்ய  சித்தனாகவும் ஆவதால் அவனே காளிகை, அவனே குரு,  அந்த அந்த கௌல உபாசகன் நிகழ்த்தும் ஆராதன க்ரமங்களில் எல்லாம் அந்த அந்த உபாஸகனுடைய வ்யக்தியிலேயே ஸாந்நித்தியம் கொண்டு அந்த அந்த யோகினி மயமாகவே மாறிவிடும் தன்மய மூர்த்தி.  
990.   குமாரீ
எல்லா ஸாக்த  மந்த்ரங்களிலும் தானே ஊடுருவி பூர்ண ஸாந்நித்தியம் கொண்டு அந்த அந்த ஸாக்த மந்த்ரோபாசகனாக  யோகினி மயமாகவே தானும் தன்மயத்வமாக மாறி அந்த அந்த உபாஸகணை ஆட்கொண்டு அருளும் தாதாத்ம்ய மூர்த்தி.
991.   கௌரவார்ச்சிதா
மூலோதாரத்திலிருந்து எழும்பி நாதோபாஸகனின் இதர ஆதாரங்களினூடே பரவி அவன் வாக்கிலிருந்து வெளிக்கிளம்பி பெருகும் மஹாநாத ரூபத்தில் தானே தன்மயமாக இயங்கிக் கொண்டு அவனுக்கு யோகமும் ஆனந்தமும் ஸித்திக்க அருளும் ஹம்ஸ ரூபிணீ.
992.   கௌண்டின்யா
முன்னொரு காலம் குண்டின மஹர்ஷியின் கோத்திரத்தில் ஒரு பெண்ணாக  ஆவிர்பவித்து அருளியவள்.
993.   கௌஸிகீ
பரஹ்பிரம்மத்தின் பாரமாத்மிக ஸக்தி மூர்த்தி.
994.   க்ரோதஜ்வாலாபாஸூரரூபிணீ
ரௌத்ர ரஸமே உருவான ஸ்ரீ மஹா காலர் சவம் போல் கிடக்க அவருடைய ரௌத்ர ரச ஸக்தியானது தன்னுடைய வ்யக்தியின் மூலமாக அக்னி ஜ்வாலை ரூபமாக வெளிக்கிளம்பி இந்தப் ப்ரபஞ்சத்தில் ஸம்ஹாரத் தொழில் செவ்வனே நடக்க ஹேதுவாக ப்ரகாசிக்கும் கோ பாக்னி  ஸ்வரூபிணீ. 
995.   கோடி
மாத்ருகா  மண்டலமாகிய மணிபீட த்ரிகோணத்தின்  த்ருதீயாம்ஸ முனைப்புகளாகிய “அ” கார ஸக்திகளாகிய நிவ்ருதி தேவதையும் அம்ருதா தேவதையும்  “க”  கார  ஸக்திகளாகிய ஸ்ருஷ்டி தேவதையும் காலராத்ரி தேவதையும்  ” த ” கார ஸக்திகளாகிய புத்தி தேவதையும்  ஸ்தாணு தேவதையும் மண்டலத்தின்  த்ருதீயாம்ஸ கோண கோடி தேவதைகளாக ப்ரதிஷ்டை ஆகி இருப்பதால் அவைகளின் வ்யக்திகளில்  தானே ஸாந்நித்தியம் கொண்டு அந்த மூன்று முனைப்புகளில் விசேஷமான மகிழ்ச்சி கொண்டு அங்கேயே  எப்பொழுதுமே  லீலைகள் பல புரிந்து கொண்டு விலாஸமாக விளங்கும் ஆனந்த மூர்த்தி.  
996.   காலானலஜ்வாலா 
ப்ரளயாக்னியின்  ஜ்வாலை போல் ஈடு இணையற்ற அதி ஜாஜ்வல்யமான ஜ்யோதிஸ்ஸுடன்  ஜ்வலிப்பவள்.
997.   கோடி மார்த்தாண்டவிக்ரஹா
கோடிக்கணக்கான ஸூர்யர்கள்ஒரே இடத்தில் ஏக காலத்தில் உதித்தாற்போல் அபரிதமான ஜ்யோதிஸ்ஸுடன் ப்ரகாஸிக்கும் பரஞ்ஜ்யோதிஸ்  ஸ்வரூபிணீ. 
998.   க்ருத்திகா
அக்னியை அதி தேவதையாகக் கொண்டதும் , ஆறு தாரைகள் கொண்டதும், கத்தியின் உருவம் கொண்டதும் ஆறு என்ற ஸங்க்யையைக் குறிப்பதும் ஆன க்ருத்திகை நக்ஷத்திரத்தை  தன் வ்யக்தியாகக் கொண்டு அதனிலேயே  பூர்ண ஸாந்நித்தியம் கொண்டு ப்ரகாசிப்பவள்,  ஆதலின்  ஆறு என்ற ஸங்க்யைக்கு உரியவள்.    
999.   க்ருஷ்ணவர்ணா
சுத்தமான கரியவர்ணத்துடன் ப்ர்காசிப்பவள்.  யாவராலும் எளிதில் உணரமுடியாதவள். தன் மந்த்ரத்தின் மூலம் எல்லா ஜீவர்களையும் தன் பால் ஈர்ப்பவள்.
1000. க்ருஷ்ணா
நிர்குணத்வம் பரமத்வம் ஆகிய  இரு பெரும் லக்ஷணங்கள் படைத்தமையின் பரஹ் ப்ரஹ்மத்தின் வ்யக்த ஸ்வரூபிணீ.
1001.  க்ருத்யா
க்ரியா  ஸக்தியின் ஸாக்ஷாத்  வ்யக்தி மூர்த்தி. 
1002.   க்ரியாதுரா
ஆராதன க்ரமங்களாகிய பூஜைகளின் அங்கங்களின் விதிமுறைப்படியான அனுஷ்டாநத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருந்துகொண்டு ஸ்ரத்தையில் சற்றும் சலியாமல் ப்ரேம த்யான பூர்வமாக ஆராதனைகளை நிர்வர்த்தனம் செய்து தனக்கு அர்ப்பணிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அருள்பவள்.
1003.   க்ருஸாங்கீ
அவளுடைய உண்மையான ஸ்வரூபம் இன்னது தான்  என்று சற்றும் யாவராலும் கண்டு கொள்ள முடியாதபடியான  அதி ஸூஷ்ம ஸ்வரூபிணீ.
1004.   க்ருதக்ருத்யா
தனக்கு இனி கர்த்தவ்யம் அதாவது அவஸ்யம் செய்தாக வேண்டியது என்ற கார்யங்கள் எதுவும் இல்லாதவள்.  அதாவது ஜீவர்களுக்கு   கர்மாவின் விதி முறைப்படியான  நிர்வர்த்தனமே ஜ்ஞானத்துக்கு அடித்தளம் ஆகையினால் கர்மானுஷ்டானத்தை ஒழுங்கான முறையில் நிகழ்த்தாத ஜீவனுக்கு’ ஜ்ஞானம் ஸித்திக்காது. அத்தகைய நிர்பந்தம் எதுவும் இல்லாத பரமாத்ம ஸ்வரூபிணீ. 
1005.   க்ர: பட்ஸ்வாஹாஸ்வரூபிணீ
“கம்” பரப்ரஹ்மம் “ரம்”  அக்னி, விஸர்க்கம் ( : ) மோக்ஷம் என்றபடி ஜ்ஞானாக்னியின் உதவியால் ப்ரஹ்ம  ஸாக்ஷாத்காரம்  ஏற்பட்டு அதன் விளைவால் மோக்ஷ ஸித்தியை குறிக்கும் “க்ர : ” என்ற பீஜமும்  அஸ்த்ர பீஜமாகிய “பட் ” காரமும் அக்னியின் ஸக்தியாகிய ஸ்வாஹா காரமும் இணைந்து அங்ஙனமாக ” க்ர: பட்  ஸ்வாஹா ” என்று உருவாகும் மஹா மந்த்ரத்தை ஸக்தி – ஸிவ தத்துவத்தின் ப்ரேம பூர்ண த்யானத்துடன் ஜபிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அருளும் மந்த்ர மூர்த்தி.      
1006.   க்ரௌம் க்ரௌம் ஹூம்பட்மந்த்ரவர்ணா
“கம் ” பரப்ரஹ்மம், “ஔம்” ஸாந்தா என்ற ஸக்தி தேவதையுடனும், “ரம்” என்ற அக்னி ஸக்தியுடனும் இணைந்த ஸதாஸிவன் அநுஸ்வாரம், அதாவது பிந்து வாகியதும், வ்யோமரூபா என்ற சிறப்புப் பெயர்  கொண்ட சந்த்ரிகையாகிய நாதபிந்து, அதாவது “க்ரௌம்” என்ற பீஜத்தின் “க்ரௌம் க்ரௌம்” என்ற இரட்டிப்பு,  “ஹூம்” காரமாகிய கூர்ச்சபீஜம், அஸ்த்ரமாகிய  “பட் ” காரம்,  ஆகிய இந்த நான்கு பீஜங்களும் சேர்ந்து  “க்ரௌம் க்ரௌம் ஹும்பட்” என்று உருவாகும் சதுரக்ஷரி மஹாமந்த்ரத்தை ப்ரேம த்யானத்துடன்  ஜபிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அருளும் வித்யேஸ்வரி.  
1007.   க்ரீம ஹ்ரீம் ஹூம்பட் நமஸ்ஸ்வதா
தக்ஷின காளிகைக்கே உரித்தான “ரஸஜ்ஞா”  என்ற பீஜமாகிய “க்ரீம”  காரம் “புவனேஸ்வரி” என்ற சிறப்புப் பெயர் கொண்ட ஸக்தி ப்ரணவமாகிய  “ஹ்ரீம்” காரம் கூர்ச்ச பீஜமாகிய “ஹூம்”  காரம் ஆகிய இந்த மூன்று பீஜங்கள் இந்த க்ரமத்தில்  “க்ரீம் ஹ்ரீம் ஹூம் ” அதாவது பரிவர்த்தனமான காலீ த்ரிதாரீ ,  அதன் பின் அஸ்த்ர மந்த்ரமாகிய “பட்”  காரம் அதன் மேல் நம: என்ற ஸரண  ப்ரணாம  மந்த்ரம், அதன் மீது பித்ரு ப்ரீதி மந்த்ரமான  ” ஸ்வதா ” அதாவது  “நமஸ்ஸ்வதா” என்ற வாசகத்துடன் இணைந்து அங்ஙனமாக  க்ரீம் ஹ்ரீம் ஹும் பட்  நமஸ்ஸ்வதா என்று உருவாகும் அஷ்டாக்ஷரி மஹாமந்த்ரத்தை ப்ரேம த்யானத்துடன் ஜபிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அருள்பவள்.
     
1008.   க்ரீம்  க்ரீம்  ஹ்ரீம் ஹ்ரீம்  ஹூம் ஹூம் பட் ஸ்வாஹா      மந்த்ரரூபிணீ.
க்ரீம்  ஹூம் ஹ்ரீம்  என்ற  காலீ த்ரதாரியின்  பரிவர்த்தன  ரூபமான க்ரீம் ஹ்ரீம்  ஹூம் என்ற  மந்த்ரத்தில் அடங்கிய மூன்று பீஜங்கள் ஒவ்வொன்றையும் இரட்டித்து க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹூம் ஹூம் என்ற ரூபம் அடைவதன் மூலம் ஸக்தி-ஸிவ தத்துவத்தின் ப்ரதிபாதனமாக  ஸ்ரீ மஹாகாலரின் ஹ்ருதயத்தின் மேலே  நின்ற  திருக்கோலமாக  உள்ள தன்னுடைய இந்த ” ஸர்வ  ஸாம்ராஜ்ய மேதா ” என்ற சிறப்புப் பெயர் கொண்ட திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தையே  அஸ்த்ரமாக “பட்” என்று ப்ர்யோகிக்கத் தேவையான அக்னி ஸக்தியை  “ஸ்வாஹா” கொடுக்கவல்ல இஷ்ட தேவதா தாதாத்ம்யம் அடைவதன் வாயிலாக உபாஸகனுக்கு ஸக்தி-ஸிவ தத்துவ மயமாகவே அதாவது தன் ஸ்வரூபமாகிய தக்ஷினகாளி மயமாகவே உருவாகும் ஸக்தியை தந்தருளும்  ஆதி  பரா  ஸக்தி  மூர்த்தி.
ஸ்ரீ ஸர்வ ஸாம்ராஜ்யமேதா என்ற ஸ்ரீ தக்ஷினகாளிகையின் ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தின் விரிவுரை இத்துடன் முற்றுப் பெறுகிறது.
இந்த மொழிபெயர்ப்பு  தமிழ் அறிந்த காலி வித்யோபாஸகர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதினால் இதனை எனது   Blog ல் பதிவு செய்துள்ளேன்.        .  

இதன் மூலத்தை அளிக்கக் காரணமாக இருந்த  என் மானஸீக குருநாதர்களான   ஸ்ரீ ராஜகோபால ஐயர், ஸ்ரீ சங்கர ஐயர்,  அவர்களுக்கு என் தாழ்மையான  வணக்கங்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் விமலானந்த மண்டலியை சார்ந்தோருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
  
சுபம்
Advertisements

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (44)

 955.   கௌஸல்யா
இந்த பூலோகத்தில்  மனிதன் ஈட்டுவதற்கு குறிக்கோளாகக் கொள்ளத் தக்க எல்லா உயர் பொருள்களுக்கும் மேலானதாக  மஹோந்நதமாக உள்ளது ஸ்ரீ தேவி காளிகையின் அநுக்ரஹ ப்ரஸாதாமே.  அது ஒன்றால் தான் மனிதனின் ஸம்ஸார தளையைத்  தறிக்க இயலும்.
956.   கௌஸலாக்ஷீ
தன் கடாக்ஷ மாத்திரத்திலேயே  இந்தப் பரந்த ப்ரபஞ்சத்தையும்  அதனில் அடங்கிய ஜீவலோகத்தையும்  பஞ்ச க்ருத்யம் செய்து நிர்வஹிக்கவல்ல ஸர்வஸக்தி மூர்த்தி.
957.   கோஸா
ஆயிரத்தெட்டு அண்டங்கள் கொண்ட இந்தப் பரந்த ப்ரபஞ்ஜம் எவளிடம் அதீனமாக அமர்ந்திருக்கிறதோ  அத்தகைய  விஸ்வாண்ட மூர்த்தி.
958.   கோமலா
இந்தப் பரந்த பிரபஞ்சத்திலேயே ஈடுஇணை யற்ற மஹோந்நதமான பேரழகி.
959.   கோலாபூரநிவாஸா
இந்தப் பரந்த ப்ரபஞ்சத்தில் எல்லா இடமுமே அவளுடைய இடமே ஆயினும், சில குறிப்பிட்ட ஸ்தலங்களில் அவள் விசேஷ ஸாந்நித்யம் கொள்கிறாள். கோலாபுரம் என்ற நகரத்தில் விசேஷ விருப்பத்துடன் உறைந்து அருள்கிறாள். 
960.   கோலாஸுரவிநாஸினீ
முன்னொரு காலத்தில்  கோலாஸூரன் என்ற ராக்ஷஸனை அழித்து அருளியவள்.
961.   கோடிரூபா
துஷ்ட நிக்ரஹ ஸிஷ்ட பரிபாலனம் செய்து தர்ம ஸம்ஸ்தாபனம் செய்வதற்காக கோடிக்கணக்கான உருவங்கள் தாங்கி பல படியான செயல்கள் புரிந்து உலக மக்களை காத்தருள்பவள்.  மேலும் வித்யராஜ்ஞீ மஹாமந்த்ரத்தில் அடங்கா ரஸகோடி, க்ரியாகோடி, ஜ்ஞானகோடி, ஆனந்தக்கோடி ஆகிய நான்கு தளங்களில் தன்  வ்யக்தியை  விநியோகம் செய்து அவற்றின் உருவத்திலேயே  தன்னை தோற்றுவித்து  அருள்பவள். 
962.   கோடிரதா
வித்யோபாஸகர்களின்  ஸஹஸ்ராரத்தின் மத்தியில் ப்ரதிஷ்டையாகி இருக்கும் மாத்ருகா மணிபீடமாகிய த்ரிகோணத்தின் மூன்று கோணங்களில் அமர்ந்துள்ள  “அ”  “க”  “த” ஆகிய மூன்று முனைப்பான மாத்ருகைகளில் விசேஷ ஸாந்நித்யம் கொண்டு அங்கு வரும் உபாஸகனாகிய யோகியை ஆட்கொண்டு அவனுக்கு மந்த்ர ஸித்தியும் ஸமாதி நிலையும் ஜீவன் முக்தியும் அருளும் மந்த்ர மூர்த்தி. 
வித்யாராஜ்ஞீயின் சதுஷ்கோடிகளாகிய நான்கு தளங்களில் விசேஷ சாந்நித்யம்  கொண்டு உறைபவள்.
தன் பக்தனின் எல்லா நிலைகள், நடத்தைகள், செயல்கள் எல்லாவற்றிலும் முனைப்பான அம்ஸங்களிலேயே விசேஷ ஸாந்நித்யம் கொண்டு அவர்களை ஆட்கொண்டு அருள்பவள்.
963.   க்ரோதினீ
ரௌத்ராஸத்தின் அங்கம் கோபம்.  ரௌத்ரம் ருத்ரனை அதிதேவதையாகக் கொண்டது. உலக மக்கள் நலனுக்காக பயன்படுவதால் தக்க தருணத்தில் அதனை ப்ரயோகிக்கத்  தேவையான ஜீவர்களின் மீது  ப்ரயோகிக்கும் ஸ்வாதீனம் பூரணமாக அமைந்த ருத்ர ஸக்தி தேவதையாதலால் சாக்ஷாத்  ருத்ரனாலேயே ஆராதிக்கப்படும் ரஸ தேவதையான பராஸக்திமூர்த்தி.   
964.   க்ரோதரூபிணீ
த்ரிபுராசுரன், கஜமுகாசுரன், மதுகைடபர்கள், பண்டாசுரன், சண்ட முண்டர்கள்,  ஸூரபத்மாசுரன், ஹிரண்யகஸிபு, ராவணன் முதலிய ராக்ஷசர்களின் ஸம்ஹாரத்திற்கு ஆதாரமாக இருந்து பரமாத்மாவின் கோபமே அந்தக் கோபத்தின் வ்யக்த மூர்த்தியாக இயங்கும் பரதேவதை தேவீ தக்ஷினகாளிகை.
965.   கேகா
மயில்  ஸந்தோஷமான மனோநிலையில் அதாவது மழை வரப்போகும் வேளையில் செய்யும் த்வனி  “கேகா” எனப்படும்.  பர்ஜன்யராஜனின் வரப்ரசாதம்  மழை.   “காதம்பினி” எனப்படும் மேகஜாலமே தக்ஷினகாளிகையின் அபர ஸ்வரூபம்.  மயிலின் ஸந்தோஷ த்வனியாகிய  “கேகாவின்” வடிவினள் காளிகை. அதாவது உலகுக்கு அம்ருத ப்ராயமான மழை கிடைக்கப் போவதை அறிந்து மயில் செய்யும் கேகா என்ற நாதத்தில் உறைந் திருப்பவள்.
    
966.   கோகிலா
பசு பக்ஷி ம்ருகங்களுக்குள் மிக்க இனிய நாதமுள்ள குரல் படைத்தது குயில் என்ற கரிய பக்ஷி. தாய்மையும் கருணையுமே உருவான காளிகை தன் மிக்க மதுர நாதம் கொண்ட இனிய குரலால் தன் குழந்தைகளாகிய ஜீவர்களை ஆதரித்து ஊக்குவித்து தேற்றுகிறாள்.  அதனால் அவளுக்கு கோகிலா என்று பெயர். மேலும் சங்கீத கலைக்கு அதி தேவதையாகிய காலிகைக்கு கோகிலா என்பது சிறப்புப் பெயர்.
திருமணஞ்சேரி என்ற க்ஷேத்ரத்தில் குடிகொண்டு எழுந்தருளி  இருக்கும் தேவியின் திரு நாமம் “கோகிலாம்பாள்”  என்ற விஷயம்  கவனிக்கத்தக்கது. 
967.   கோடி
எந்த விஷயத்திலும் அதனுடைய மிகச் சிறப்பான அம்ஸம் எதுவோ அதெல்லாம் காளிகையின் சிறப்பான ஸாந்நித்யம் கொண்டதாம்.  குறிப்பாக தனது இடது மேற் கரத்தில் தான் தரிக்கும் பத்ராத்மாஜன் என்ற பட்டாக்கத்தியின் மிகச் சிறப்பான அம்ஸமாகிய அதன் கூறிய முனைப்பிலேயே தான் விசேஷ சாந்நித்யம் கொண்டு அதனை வழிபடும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு புத்தி கூர்மையும் தெள்ளிய ஞானமும் அருள்பவள்.
ஷிப்ராநதி தீரத்தில் ப்ரசித்தமாக உள்ள மஹாகால ஷேத்ரத்திற்கு “கோடி தீர்த்தம்” என்று சிறப்புப் பெயர்.   அதனில் ஸ்நாநம் செய்து மஹாகாலரையும் மஹாகாளியையும் தரிசித்து வழிபடுபவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலன் பெறுவர் என்று மஹாபாரதம் வன பர்வம் கூறுகிறது. 
968.   கோடிமந்த்ரபராயணா 
தன் பக்தர்கள் தக்க ஆச்சார்யரிடமிருந்து கலாவதி பூர்ண தீக்ஷையும் கோடி ந்யாஸமும் ஸ்வீகரித்து ஹோமாதி யஜ்ஞங்களும் விதிமுறைப்படி நிகழ்த்தி கோடிக்கணக்கான ஸங்க்யையாக மூல மந்த்ர ஜப ஆவ்விருத்தி  செய்து தனக்கு அர்ப்பணித்து அனன்யமாக ஸரணமடைய  அவர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ப்ரஹ்ம ஞானமும்  ஆனந்தமும், ஜீவன் முக்தியும் அளித்தருளும் காருண்ய மூர்த்தி. 
969.   கோட்யனந்தமந்தரயுதா
தன் ப்ராணநாயகராகிய  ஸ்ரீ மஹாகாலராலும் தன் வித்யா க்ரமத்திற்கு ருஷீஸ்வரராகிய ஸ்ரீ கால பைரவராலும் இன்னும் அவர்களைப் போன்ற இதர மஹாதிகாரிகளாலும்  தன் விஷயமாக  எண்ணற்ற பல கோடிக்கணக்கான மந்த்ரங்கள் அமைக்கப்பட்டு, அந்த மந்த்ரங்களின் விக்ரஹமயமாகவே ப்ரகாசிக்கும் மஹாவித்யாமூர்த்தி.  
970.   க்ரைம்ரூபா
வித்யாராஜ்ஞீயின் ப்ரதம பீஜமாகவும் ரஸஜ்ஞா என்ற சிறப்புப் பெயர் பெற்றதாகவும் உள்ள ‘ஈ’ காரத்தின் ஸ்தானத்தில் காமகோடி எனப்படும் ‘ஐ’ கார மாத்ருகையை வைத்து அங்ஙனமாக ‘க்ரைம் ‘  காரமாக உருவாகும் பீஜமே தன் வ்யக்த ஸ்வரூபமாகக் கொண்டு அதனில் தானாகவே ஸாந்நித்யம் கொண்டு அதனை ப்ரேம த்யானத்துடன் ஜபிக்கும்  பக்தர்களை  ஆட்கொண்டு அவர்களுக்கு ஸாக்தானந்தமும் ஸமாதி நிலையும் ஆத்ம ஜ்ஞானமும்  சீக்கிரமே மந்த்ர ஸித்தியும் ஜீவன் முக்தியும் அளித்து மகிழும் ஆனந்த மூர்த்தி. 
971.   கேரலாஸ்ரயா
எண்ணிக்கைகளை  மாத்ருகா வர்ணங்களால் குறித்து கனனம் வ்யவஹரிக்கும்  ஒரு ஸம்ப்ரதாய பத்ததி புராண காலத்திலிருந்து பாரத தேஸத்தில் பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. இங்ஙனமாக கர்க்க முனிவராலும், வரசி ருஷி யினாலும் உபதேசிக்கப்பட்ட சங்க்யாமான பத்ததியிலும்,  முக்கியமாக கேரள தேசத்தில் அதனை அநுஸரித்து கணித ஸாஸ்த்ரத்தை  அனுஷ்டிக்கும் முறைகளிலும் மிக்க மகிழ்ச்சி கொண்ட ஸாஸ்த்ரமய மூர்த்தி.
972.   கேரலாசாரநிபுணா
கேரள நாட்டில் வாழும் அதி தீவிரமான ஸாக்த வித்யோபாஸகர்களால் அனுஷ்டிக்கப்படும் தன் ஆராதன க்ரமங்களின் விதிமுறைகளில் பெரிதும் மகிழ்ச்சி கொண்டு அவர்களை மனமார  ஆட்கொண்டு அருளும் கருணாமூர்த்தி.
973.   கேரலேந்த்ரக்ருஹஸ்திதா
அதி தீவிரமான வித்யோபாஸகர்கள்  ஏராளமாகக் குழுமியுள்ள கேரள தேசத்து அரசர்கள் மிக முனைப்பாக தன்னை ஆராதித்து வழிபடுவதைக் கண்டு மிகக் களிப்படைந்து அவர்கள் தன்னை ஸாஸ்வாதமாகவே தம் அரண்மனைகளில் ப்ரதிஷ்டை செய்ய, அதனை மிக்க மகிழ்ச்சியாக  ஏற்று  அங்கேயே நிரந்தரமாக நிலைத்த ஸாந்நித்யம் கொண்டு அவர்களையும் அவர்களது ப்ரஜைகளையும் ஆட்கொண்டு அருளும் ஆனந்த மூர்த்தி.
 974.   கேதாராஸ்ரமஸம்ஸ்தா
இந்தப் பூவுலகில்  பூகைலாஸம் என்னும்படியாக விளங்கும்  மஹாபுனிதமான ஸிவ ஸ்தலங்களில் ஒன்றாகிய கேதார ஷேத்திரத்தில்  மஹா தபஸ்விகளாக வாழும் ஸிவ பக்த சிகாமணிகளின் ஆஸ்ரமங்களில் மிக்க மகிழ்ச்சி யாகத் தானே  சென்று அங்கேயே நித்ய வாசம் செய்து மகிழ்பவள்.   
975.   கேதாரேஸ்வரபூஜிதா
இமயமலை மீது அமர்ந்துள்ள மஹாபுண்யமான  பர்வத சிகரம் ஸ்ரீ கேதார பர்வதம். அதனில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள கேதாரேஸ்வரர்  ஒரு ஸ்வயம்பு  லிங்க மூர்த்தியாக அமர்ந்திருக்கிறார்.  ப்ரதி தினமும் தன் பரிவாரங்களாகிய பூத கணங்கள் புடை ஸூழ ஸ்ரீ கேதாரேஸ்வரர் உன்மக்த ருத்ர  தாண்டவம் செய்வதாக  மரபு.  அவர்  தன் பரிவார தேவதைகளுடன் தேவி காளிகையை வெகு விஸ்தாரமாக  ஆராதித்து வழிபடுகிறார்.  இந்த விபரம் ஸ்ரீ ஸ்கந்த புராணம் கேதார காண்டத்திலும், காஸி காண்டத்திலும் விளக்கப்பட்திருக்கிறது.    
976.   க்ரோதரூபா
தானே ரௌத்ர ரஸத்தின் அதி தேவதை ஆனதால், வேத வாக்கியத்தின் படி தக்ஷினகாளிகை பரமசிவனின் கோபத்தின் வ்யக்த ஸக்தி மூர்த்தியாகிறாள்.  மேலும் அஜைகபாத், அஹிர்ப்புத்ன்யர், விரூபாக்ஷர், ஸூரேஸ்வரர், ஜயந்த்ர், பஹூரூபர், த்ர்யக்ஷகர், அபராஜிதர், வைவஸ்வதர்,  ஸாவித்திரர், ஹரர் என்ற பதினோரு ருத்ரர்களாக ஆவிர்பவித்து அவர்கள் செய்யும் செயல்களுக்கு சக்தி அளிப்பவள்.     
977.   க்ரோதபதா
நமஸ்தே ருத்ர மன்யவே என்று தொடங்கும் ருத்திராத்தியாயத்தில் அடங்கிய பதினொறு அநுவாகங்கள் மூலமாக ஸூஸிக்கப்பட்டுள்ள பதினொறு ருத்ர மூர்த்திகளின் ஸ்வரூபத்தால் ஒருவாறு உணரத்தக்க ரௌத்ரமூர்த்தி. 
978.   க்ரோதமாதா
ஆர்த்ரா நக்ஷத்திரத்தின் அதிதேவதையாகிய ருத்ரனின் ரௌத்ர ஸக்தி மூர்த்தி.
979.   கௌஸிகீ
வ்ரதங்களில் பரமோத் க்ருஷ்டமான பாதிவ்ரத்ய வ்ரத ஸீல பூர்ண மனோலீன ப்ரதிஷ்டிதையான  ஸத்யவதீ  ருசீக மஹர்ஷியை மணந்தது, உலகத்தவருக்கு பதிவ்ரதத்தின் மஹோந் நதமான பெருமையை நிதர்சனமாக எடுத்துக் காட்டி, கேவலம் பதி ஸுஸ்ருஷையால் மட்டும் பூத உடலுடனேயே ஸ்வர்க்கம் சென்றடைந்து லோகோபகாரமான கௌசிகீ என்ற மஹா புண்ய நதியாக ஹிமாலயத்தில் ஆவிர்பவித்து உலக மக்களை பாவனமாக்கிக் கொண்டிருக்கும் பதிவ்ரதா ஸிரோமணி.
(அடுத்த பதிவில் தொடரும்.)

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (43)

932.   கீம்கீம் ஸப்தபரா
காளியை குறிக்கும் அக்ஷரமாகிய ‘க ‘கார மாத்ருகை மீது காமகலையாகிய ‘ஈ ‘ காரமும் அதன் மேல் பிந்துவாகிய அநுஸ்வாரமும் ஏறி, இவ்வாறு இந்த மூன்று மாத்ருகைகளும் சேர்ந்து கீம் என்று ஆகி அதுவும் ஸக்தி-ஸிவ தத்துவத்தை ப்ரதிபாதிக்கும் வகையாக “கீம் கீம்” என்று உருவாகும் இந்தகூட்டை ப்ரேம த்யானத்துடன் ஜபிக்கும்  பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ஜ்ஞானமும் ஆனந்தமும் முக்தியும் அளித்து அருள்பவள்.
933.   க்லீம் க்லூம் க்லைம் க்லௌம் ஸ்வரூபிணீ
இந்த நான்கு பீஜங்களையும் சேர்த்து உருவாகும் மந்த்ரத்தை ப்ரேம த்யானத்துடன் ஜபிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அவர்களை அநுக்ரஹிக்கும் கருணாமூர்த்தி. 
934.   காம் கீம் கூம் கைம்ஸ்வரூபா
இந்த நான்கு பீஜக் கூட்டாக அமைந்து, உருவாகும் மந்த்ரத்தை  ப்ரேம த்யானத்துடன் ஜபிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு தர்மார்த்த காம மோக்ஷங்களாகிய சதுர் வர்க்கங்களை அளித்து அருளும் பரம கல்யாண மூர்த்தி.  
935.   க: பட்மந்த்ரஸ்வரூபிணீ
யோகத்தின் அடித்தளமாகிய த்யாக  தத்துவத்தின் ப்ரதிபாதகமான ஸவிஸர்க்க ரூபமான  “க” கார மாத்ருகையான – அதாவது ‘க ‘ என்ற பீஜத்தை தொடர்ந்து  “பட் ”  என்ற  அஸ்த்ர பீஜத்தை வைத்து இவ்விரு பீஜக்கூட்டை ஜபிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ஸம்ஸாரிகமான தளைகளை களைந்தது அவர்களை அநுக்ரஹிக்கும் ஔதார்யமூர்த்தி. 
(மேலும் கீம்  கீம்  க்லீம்  க்லூம்  க்லைம்   க்லௌம்   காம்  கீம்   கூம்  கைம்  க:   பட்   என்று சமஷ்டியாக உருவாகும்  த்வாதஸாக்ஷரீ மஹாமந்த்ரத்தை ஜபிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு, அவர்களுக்கு  அநுக்ரஹ நிக்ரஹ பலமும் ராஜயோக ஸித்தியும் ஜீவலோக மஹோபகார ஸக்தியும் ஜீவன் முக்தியும் அருளி மகிழும் மஹா ஔதார்யமூர்த்தி.) 
936.   கேதகீபூஷணானந்தா
தாழம்பூக்களாலான அலங்காரத்தில் பெரிதும் ஆனந்தம் அடைபவள்.
937.   கேதகீபரணாந்விதா
எப்போதுமே தாழம்பூக்களாலான ஆபரண அலங்காரத்தோடு கூடி ப்ரகாசிப்பவள்.
938.   கைகரா
ஹ்ரீம் க்ரீம் ஹூம் ஹ்ரீம் என்ற “சதுஸ்தாரி” என்ற கூட்டை ப்ரேம த்யானத்துடன் ஜபிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு  அவர்களுக்கு ஸக்தியும், மந்த்ரஸித்தியும், ஜ்ஞானமும், ஆனந்தமும், ஸாந்தியும் ஜீவன் முக்தியும் அருளும் பராஸக்தி மூர்த்தி.  
939.   கேஸினீ
ஏராளமாக வளர்ந்து பெருகி நாற்புறமும் வீசிப் பரவிக்கொண்டு ஸதா ஆடிக்கொண்டே இருக்கும் கேஸபாரம் கொண்ட அஸாதாரணமான பேரழகி.
940.   கேஸீ
மஹாநிர்குண ரூபிணீ ஆதலால் பரந்து விரிந்து கட்டிலடங்காத ஸதா ஆடிக்கொண்டே இருக்கும் கேஸ பாரமே தனது முக்கியமான லக்ஷணங்களில் ஒன்றாகக் கொண்ட ஆதி பராஸக்தி மூர்த்தி. 
941.   கேஸீஸூதனதத்பரா
த்வாபர யுகத்தில் உலகோரை மிகக் கடுமையாக ஹிம்சித்துக்  கொண்டிருந்த  “கேஸீ” என்ற மிகக் கொடிய ராக்ஷசனை தான் க்ருஷ்ண ரூபத்தில் ஆவிர்பவித்து அழித்து அருளிய தர்ம மூர்த்தி.
942.   கேஸரூபா
யாவராலும் தன் முழு ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்து கொள்ள முடியாது என்ற தத்துவத்தை, நீருண்ட மேகம் போல் கரிய ஸாயல் கொண்ட தன் கேஸபாரத்தின் பளபளப்பான காந்தியின் மூலம் தன்னை த்யானிக்கும் தன் பக்தர்களுக்குத் தெரிவித்துக் கொண்டே இருக்கும்  இயல்பு கொண்டது. 
943.   கேஸமுக்தா
நிர்க்குணமும்  நிர்லிப்தமும் ஆன பரப்ரஹ்மம் எந்த விதமான கட்டுப்பாடும் அளவையும் கடந்தது (அஸிதம்) என்ற தத்துவத்தை ஸூஸிக்கும் வகையில் தேவி ஸ்ரீ தக்ஷினகாளிகையின் கேஸபாரம் ஒருவிதமான கட்டிலும் அடங்காமல் நாற்புறமும் வீசிப் பரந்து  சுழன்று சுழன்று ஆடிக்கொண்டே இருக்கும் இயல்பு கொண்டது.   
944.    கைகேயீ
ஒருகாலத்தில் கேகய  நாட்டு மக்களால் வெகு ஆர்வமாக ஆராதிக்கப் பட்டு வந்ததால் அந்நாட்டிலேயே வெகு மகிழ்ச்சியுடன் லீலாவிலாசமாக ஸாந்நித்யம் கொண்டு இருந்ததால் தேவிக்கு கைகேயி என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது.
945.   கௌஸிகீ
ஸ்ருங்கார ரசமே ஒரு தேவதையாக உருவெடுத்து வந்தாற்போல் ரஸராஜாவாகிய அந்த இன்பச்  சுவையே காளிகையின் உருவத்தில் தோன்றி தன் ப்ராணநாயகராகிய ஸ்ரீ மஹாகாலருக்குப் பேரின்ப  ஆனந்தத்தை மழை எனப் பொழிந்தருளும் ரஸ ப்ரவாஹநாயகி.
மேலும் தர்ம ஸம்ஸ்தாபனத்திற்காக நாராயணன் க்ருஷ்ணன் அவதாரம் எடுத்த காலத்தில் அவருக்கு முன் யஸோதா கர்பத்தில் உதித்தருளிய யோகமாயா மூர்த்தி. 
946.   கைரவா
ப்ரேம த்யான  பூரணமான ஜபம் செய்து லயித்திருக்கும்  பக்தனது யோகத்தில் ப்ரீதி கொண்ட பரம ஹம்ஸ  மூர்த்தி. 
947.   கைரவாஹ்லாதா
யோகியாகிய தன் பக்தனின் மனஸ்ஸாகிய குமுதத்திற்கு ப்ரியனான சந்திரன் போலுள்ள குருஸ்வரூபிணீ.
948.   கேஸரா
ஹரித்ரா குங்குமத்தில் நித்ய ஸாநித்யம் கொண்டு அதனால் தனக்கு அர்ச்சனைகள் பல புரிந்து வழிபடும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அருள்பவள்.
949.   கேதுரூபிணீ
ஸர்வ ஜந்துக்களிலும் அவர்களுடைய அறிவு ரூபத்தில் அமர்ந்து பக்தியாலும் ஜ்ஞானத்தெளிவினாலும் மந்த்ர ஜபத்தாலும்  யோகாப்யாசத்தாலும் புத்தி மலர்ச்சி அடைந்துள்ள தன் பக்தர்களுக்கு மந்த்ர ஸித்தியும் அதனால் ஏற்படும் ப்ரஹ்மஜ்ஞான ப்ரகாசமும் அளித்தருளி மகிழ்பவள். 
950.   கேஸவாராத்யஹ்ருதயா
தான் நிர்குண ப்ரஹ்ம ஸ்வரூபிணீ ஆனதால், வீசிப்பரந்து ஸதா சுழன்று ஆடிக்கொண்டே இருக்கும் கேஸபாரமே தன் ப்ரதான லக்ஷணங்களில் ஒன்று ஆனதால் அந்த நிலையிலேயே ஆராதிக்கப்படுவதில் பெரிதும் மகிழ்ச்சி கொள்பவள்.  மேலும் தன் பரிவார தேவதைகள் புடை சூழ, ஸ்ரீ மஹாவிஷ்ணுவால் வெகு விஸ்தாரமாக ஆராதிக்கப் படுவதில் பெரு மகிழ்ச்சி கொள்பவள். 
951.   கேஸவாஸக்தமானஸா
தன் பரிவார தேவதைகளில் ஒருவராகிய ஸ்ரீ மஹாவிஷ்ணு தன் பக்தர்களுக்குச் செய்யும் மஹோபகாரங்களைக்  கண்டு களித்து  அவர்மீது அளவு கடந்த அன்பைப் பொழிந்து, எப்பொழுதுமே அவர் தன் ஸந்நிதியிலேயே இருப்பதில் பெரு விருப்பம் கொள்ளும் மஹா வாத்ஸல்ய மூர்த்தி.  
952.   க்லைப்யவிநாஸினீ
தன் பக்தர்கள் வம்ஸவ்ருத்தியுடன்  விளங்கவேண்டும் என்று அவர்களுக்கு தடை இல்லாத ஸந்தான வ்ருத்தியை அநுக்ரஹிக்கும்  பெருவள்ளல்.
953.   க்லைம்
‘க்லைம் ‘ என்று ஒரே பீஜத்தால் ஆன பிண்ட மந்த்ரத்தை ப்ரேம த்யானத்துடன் ஜபிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு அருளும் ஜகன் மாதா.
954.   க்லைம்பீஜஜபதோஷிதா 
மன்மத பீஜமாகிய ‘க்லீம் ‘காரத்தில் உள்ள ‘ஈ ‘ காரத்தின் ஸ்தானத்தில் வாக்பவ மாத்ருகை யாகிய ‘ஐ ‘ காரத்தை வைத்து அவ்வாறு  ‘க்லைம் ‘ என்று உருவாகும் ஒரே பீஜத்தாலான பிண்ட மந்த்ரத்தை அனன்ய சரணாகதி பாவத்துடனும் ப்ரேம த்யானத்துடனும் ஜபிக்கும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அபாரமான வாக்ஸக்தி பெருக அருளும் வாகீஸ்வரிமூர்த்தி.


(அடுத்த பதிவில் தொடரும்.)

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (42)

901. குகதிக்னீ
துர் மார்க்கமான நடத்தை உள்ளவர்களைத் தக்கபடி தண்டித்து அவர்களைத் தூய்மைப் படுத்தும் வேத நாயகி
902.  குபேரார்ச்யா 
சகல அண்டங்களின் ஸமுதாயங்களுக்கும், அவற்றில்  அமர்ந்துள்ள எல்லா சேதனா சேதன ப்ரக்ருதிகளுக்கும் தாய் தந்தையர் களான பார்வதி பரமேஸ்வரர்களை ஸதாகாலமும் நிரந்ததரமாக ப்ரேமையுடன் ஆராதித்துக்கொண்டே இருக்கும் குபேரதேவன் யக்ஷர்களின் தலைவன்.  குறிப்பாக அவனே தக்ஷினகாளிகையின் மிகச் சிறந்த ஓர்  உபாஸகன். மேலும் தக்ஷினகாளிகையின் ஒரு தனி சிறப்பான மூர்த்தி பேதமாகிய குஹ்ய காளிகையைச் சிறப்பாக அனவரதமும் உபாஸிக்கும் ஸ்ரேஷ்டமான வித்யோபாஸகன்.   அப்படிப்பட்ட உத்தம உபாஸகனான குபேரனால் தன் பரிவாரங்களான யக்ஷ யக்ஷினிகள் புடைசூழ எப்பொழுதுமே மிக விஸ்தாரமாக ஆராதிக்கப்படுபவள்.
903.   குசபூ :
ஒரு சிசு தன் தாயினிடம் ஸ்தன்யபானம்  பண்ணிக்கொண்டே அம்ருதத்துக்கு ஒப்பான   தாய்ப்பால் உண்டு சௌக்கியம்  அடைவது போல் தன் பக்தர்கள் தன் மூல மந்த்ரத்தை ப்ரேம பக்தியுடன் ஜபிக்குங்கால் உடனே மோக்ஷம் அளிக்க வல்ல ப்ரஹ்மஞானத்தை அவர்களுக்கு அளித்து அருளும் ஜகன்மாதா.
904.   குலநாயிகா
குலஸாதகர்களால் உபாஸிக்கப்படும் இஷ்ட தேவதையாக மட்டும் இல்லாமல் அவர்கள் தோன்றிய குலத்தையே தலைமுறை தலைமுறையாக காப்பாற்றி அருளும் பெருவள்ளல்.
905.   குகாயனா
தன் வித்யோபாஸகர்களுடைய மூலாதார ஸ்தானத்திலிருந்து உத்பத்தி யாகும் “பரா” வாக் ரூபமாக எழும் நாதமானது “[பஸ்யந்தி”  “மத்தியமா” நிலைகளை தாண்டி “வைகரீ” நிலையில் வெளிக்கிளம்பி கேட்பவர் காதில் பேரானந்தம் அளிக்கும் மஹா ரஸவத்தான கானமாக விழும் இசை வடிவில் பரவி யாவரையும் மகிழ்விக்கும் நாதப்ரஹ்ம ஸ்வரூபிணீ.
906.   குசதரா
தன் குழந்தைகளாகிய ஜீவர்களுக்குத் தன் ஸ்தன்யாம்ருதமாகிய ஸக்தி, ஞானம், ஆனந்தம், ஸாந்தி,   ஆகியவற்றை வரையாது பொழிந்து, அவர்களுக்கு தன் அநுக்ரஹப் பயனாகிய ஜீவன் முக்தி நிலையை வழங்கி அருளும் அநுக்ரஹமூர்த்தி.
907.   குமாதா
பூமி முதலான எல்லா லோகங்களுக்கும் அதாவது எல்லா அண்டங்களுக்கும் தாயாக இருந்துக்கொண்டு எல்லா ஜீவ ஸமூஹங்களும் வாழும் இந்தப் பரந்த ப்ரபஞ்ஜத்தையும் பஞ்ச  க்ருத்ய கலனம் செய்து அருளும் ஜகன்மாதா.   
908.   குந்ததந்தினீ
மல்லிகை புஷ்பம் போல் அழகிய பற்கள் கொண்ட பேரழகி. “குந்தம்” என்ற வர்ஷபர்வதம் போல் மஹா வலிமை கொண்ட பற்கள் கொண்ட பராசக்தி மூர்த்தி.
909.   குகேயா
தன் வித்யோபாஸகனின்  மூலாதாரத்திலிருந்து எழுந்து  “பரா”  “பஸ்யந்தி” “மத்தியமா”  ஸ்திதி களைக் கடந்து அவனது முக குஹரத்திலிருந்து “வைகரீ” நிலையில் வெளிக்கிளம்பி காற்றில் பரவிப் பெருகுகையில், ஸாமவேதம் முதலான பல  ரூபங்களான வாஸகர்களிநூடே விரவி, மிக்க இனிமையான ஒலிச்செரிவும், மிக ஆழமான கருத்துச் செறிவும் கொண்டு  கேட்பவர்கள் காதில் மஹோந்நதமான இசை வடிவாகப் பாய்ந்து அவர்களுக்கு பேரானந்தம் அருளும் நாத ப்ரஹ்ம ஸ்வரூபிணீ. 
910.     குஹராபாஸா
குண்டலினி யோகம் அப்யஸிக்கும் பக்தனின் குண்டலினி ஸக்தியின் எழுச்சி ஹ்ருதய குஹையிலிருந்து மேலே எழும்பி கண்டத்தை அடைந்து அங்கிருந்து இனிய நாத வடிவில் அவனுடைய முஹ குஹரத்திநூடெ வைகரீ வாக் ரூபமாக வெளிக்கிளம்பி கேட்பவர்கள் காதில் நாதாம்ருதமாக வந்து விழுந்து ஆனந்தம் அளிக்கும்போது, நாதத்தின் ப்ரகாஸ வடிவில் ஒளிரும் நாத ப்ரஹ்ம ஸ்வரூபிணீ. 
 911.      குகேயா
தன் வித்யோபாசகனுடைய குண்டலினி எழுச்சியின் ஸக்தி வடிவினளாக அவன் அப்யசிக்கும்  வித்யாராஜ்ஞீயின் ஒலி ஓட்டத்தில் ஊடுருவி அந்த நாதத்தில் அவன் லயித்து அவனுக்கு நாத வடிவினனாகவே அவ்விடத்தில் குருஸ்வரூபிணீயாக வீற்றிருக்கும் தன்னுடைய பாதுகையில் ஒன்றி லயித்து, நாத லய யோகத்தில் நிலைத்து அந்த ஆனந்தத்தில் மூழ்கி, குருவாகிய தன்னுடைய கடாக்ஷம் பெற்று அங்கேயே நாத ப்ரஹ்மானந்த வடிவினனாக நிலை பெற்று நித்ய சுகம் பெற அருளும் நாதரூப ஸுந்தரி.   
912.   குக்னதாரிகா
தன் பக்தனுடைய பாபங்களையும் கழ்டங்களையும் அழித்தருளும் மஹாமங்கள ஸ்வரூபிணீயான பராஸக்தி மூர்த்தி. 
913.   கீர்த்தி:
தன்னுடைய மூலமந்த்ரமாகிய வித்யாராஜ்ஞீயை ந்யாஸ பூர்வமாகவும் த்யான ஜபங்கள் மூலமாகவும் நன்கு உணர்ந்து விதிமுறைப்படி உபாசிக்கும் தன் பக்தனுக்கு இஹபர சுகங்களும், மகிழ்ச்சியும், நற்கீர்த்தியும் மந்த்ர ஸித்தியும் ஜீவன் முக்தியும் அளித்தருளும் பரமானந்த மூர்த்தி.
914.  கிராதினீ
துஷ்ட நிக்ரஹ ஸிஷ்ட  பரிபாலனம் செய்து உலகங்களை காக்கும் வாயிலாக பல வகை ரூபங்கள் கொண்ட பல அவதாரங்கள் எடுத்து ஒரு ஸமயம் துர்க்கையாகவும், மற்றொரு ஸமயம் வேடிச்சியாகவும் ஆவிர்பவித்து அருளியவள்.  
915.   க்லின்னா
அவ்வப்போது எந்த ஸந்தர்பங்களிலும் ஹ்ருதயத்தில் கருணாதி ரஸங்கள் பொங்கி வழிந்தோட அன்பு ரஸ  மயமாகவே இயங்கி  ஜீவர்களை ஆட்கொண்டு  அருள்பவள்.
916.   கின்னரீ
உத்தம யோகீஸ்வரனான குபேரனுடைய பரிசர வர்கங்களில் சேர்ந்தவர்களும் புலஸ்த்ய மஹர்ஷியின் வம்ஸத்தில் உதித்தவர்களும் குதிரை முகம் கொண்டவர்களும் ஆன கின்னர ஸ்த்ரீகளுள் ஒருத்தியாக தான் ஆவிர்பவித்து தானும் ஒரு கின்னரியாகவே பழகிக்கொண்டு அந்த மஹா யோகீஸ்வரனான குபேரனுடைய ஆராதன க்ரமங்களை மனப்பூர்வமாக ஏற்று அவர்களை ஆட்கொண்டு அருளும் சௌலப்பியமூர்த்தி.  
917.   க்ரியா
குபேரனுடைய பரிசர வர்க்கங்களில் சேர்ந்த ஒருவகை தேவஜாதிப் பெண்மணியாகிய கின்னரி நிகழ்த்தும் உபாஸன ஆராதன க்ரமங்களில் பெரிதும் மகிழ்ச்சி கொண்டு அவர்களை ஆட்கொண்டு அருளும் சௌலப்யமூர்த்தி.
918. க்ரீம்காரா   
மாத்ருகா மண்டலத்தில் அமர்ந்துள்ள ஐம்பத்தொரு மாத்ருகைகளிளிருந்து ஸக்தி-ஸிவ தத்துவத்தை ப்ரதிபாதிக்கும் சிறப்பான  பீஜமாக க்ரீம் என்ற பீஜத்தை நமக்கு உருவாக்கிக் கொடுத்த பராஸக்திமூர்த்தி.  மேலும் அந்த பீஜத்துக்கு உரியவள் அவள் ஒருத்தியே.
919.   க்ரீம்ஜபாஸக்தா
ரஸஜ்ஞா என்ற சிறப்புப் பெயர் கொண்ட காலி பீஜமாகிய க்ரீம் காரத்தை பிரேம த்யானத்துடன் தாதாத்ம்ய பாவத்துடனும் ஜபிப்பதிலே கண்ணும் கருத்துமாக உள்ள உத்தம யோகிநியாகிய  தன் பக்தனுடைய வ்யக்தியிலேயே தான் பூர்ண ஸாந்நித்யம் கொண்டு அவனை ஆட்கொண்டு அருளும் தன்மயத்துவ மூர்த்தி. 
920.   க்ரீம்ஹூம்ஸ்த்ரீம்மந்ரரூபிணீ 
க்ரீம்  ஹூம்  ஸ்த்ரீம்  ஆகிய இம் மூன்று பீஜங்களின் கூட்டாய் உருவாகும் சிறந்த மந்த்ரமே தன் ஸ்வரூபமாகக்  கொண்ட மந்த்ர ரூபிணீ.
921.   க்ரீம்மீரிதத்ருஸாபாங்கீ
பொதுவாகக் கருணா ரஸமே வடிவான ஜகன்மாதாவாயினும் ஜீவர்களுடைய பல தரப்பட்ட எண்ணங்களையும் நடத்தைகளையும் செயல்களையும் கண்ணுறும் பொது, சில சமயங்களில் ஆதரவு, சில சமயங்களில்  “ஆகா இப்படியும் இழிந்து போகிறானே” என்ற வருத்தம், சில சமயம் அதிகக் கடுமையான குற்றம் செய்பவர்களைக் கண்டு கோபம்  – இங்ஙனம் பலதரப்பட்ட கண்ணோக்கு கொண்டு ஜீவ ஸமூஹங்களை காண்பவள்.
922.   கிஸோரீ
எப்பொழுதும் இளம் பெண் உருவத்திலேயே அதாவது குமாரியாகவே இருந்துகொண்டு எந்த சூழ்நிலையிலும் லீலா விநோதமாகவே பழகிக்கொண்டுதன் குழந்தைகளாகிய எல்லா ஜீவா வர்க்கங்களையும் ஆட்கொண்டு அருளும் ஜகன்மாதா.
923.   கிரீடினீ
யோகியர்களின் ப்ரஹ்மரந்ர ஸ்தானங்களாகிய ஸிரஸ்சுகளைக் கோத்த முண்ட மாலையைத் தன் கண்டத்தில் தரித்து யோகத்தின் மஹோந்நதமான சிறப்பைத் தன் பக்தர்கள் நன்கு உணரச்செய்யும் யோகேஸ்வரி.
924.   கீடபாஷா
ஸாமவேதம் முதலான   தெய்வீக கானம் செய்யும் காயகர்களின் வாக்கில் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் உறைந்து ஆட்கொண்டு அருளும் கருணாமூர்த்தி. 
925.   கீடயோனி
காயகர்களின் குலத்தில் தான் உதித்து அவர்களைப் போல தானும் ஒரு காயகியாக கானம் செய்து தன்  மதுர கானத்தால் எல்லோரையும் மகிழ்விக்கும் ஆனந்தமூர்த்தி.    
926.   கீடமாதா
ஜீவர்களுக்கு பரமாத்மாவின் குண நலன்களை உணர்த்துவதற்கு பஞ்ச ஜ்ஞானேந்த்ரியங்களும் மிக்க ஸக்திமத்தான கருவி செவியே.  செவியின் மூலமாக ஜீவனின் புத்தியை எட்டி ஊக்குவிப் பதற்கு கானமே மிக வீர்யம் உள்ளது. கானத்தில் உத்தமமானது ஸாமதானம்.  சிறந்த ஸாமர்களை உலகத்துக்குப்  பேருபகாரமாக ஈன்றருளும் வேத மாதா தேவி தக்ஷினகாளிகையே.  
927.   கீடதா
ஹா ஹா ஹூ ஹூ, சித்திரசேனன், சித்ரரதன், விஸ்வாஸூ, நாரதர், தும்புரு, கம்பலன், ஆஸ்வதரன், ஆஞ்சநேயர், வால்மீகி, முதலிய உத்தம காயகர்களை ஸ்ருஷ்டித்து உலகுக்கு ஈந்தருளிய பெருவள்ளல். 
928.   கிம்ஸுகா
சிவந்த முகத்தைக்கொண்ட கிளி எப்படி இனிக்கப்பேசுகிறதோ, அதேபோல் சிவந்த நாக்கு வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் காளியின் வாக்கிலிருந்து முத்து முத்தாக உதிரும் மிக்க மதுரமான ஆதரவுச் சொற்கள் பக்தர்கள் காதில் இன்ப நாதமாக விழுந்து அவர்களுக்கு பேரானந்தத்தை மழையென வழங்கி மகிழ்விக்கிறது.
929.   கீரபாஷா
தன் பக்தர்கள் பால் உள்ள அன்பின் பெருக்கால் அவர்களை ஆதரித்து அவள் பேசும் பேச்சானது,  கிளி கொஞ்சிக் கொஞ்சி மழலையாகப் பேசுவது போல் தனது மிக்க இனிமையான பேச்சால் யாவரையும் மிக மகிழ்விப்பவள்.
930.   க்ரியாஸாரா
க்ரியா  ஸக்தியின் வ்யக்த ஸ்வரூபமாகவே தோன்றி அருளியவள்.
931.   க்ரியாவதீ
க்ரியா ஸக்தி தத்துவத்தின் ப்ரதிபாதகமாக, ஸவங்களின் கரங்களைக் கோத்த மேகலையை இடுப்பில் தரித்திருப்பவள். 
(அடுத்த பதிவில் தொடரும்.)

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (41)

879.   குமதீ
ப்ருதிவீ தத்துவத்தின் வ்யக்த மூர்த்தியான மூலாதார சக்ர தள கமலத்தையே தன் ஸ்வரூபமாகக் கொண்டு தன் பக்தன் தன்னை அதனிலிலேயே முழுமையாக உணர்ந்து த்யானித்து இஷ்ட தேவதா தன்மயத்வம் எய்தி நித்ய சுகம் பெற அருளும் தானிதி.
880.   குலஸ்ரேஷ்டா
குலஸாதகர்களின் பரம்பரையில் வேரூன்றிய ஸாக்த உபாஸன க்ரமங்களில் ஸர்வோத்தமமான   குலதெய்வமாகவும்  இயங்கிக்கொண்டு தன் பூரண ஸாந்நித்யமும் பூரண அருளும் பொழிந்து அந்தக் குலத்தையே  உத்தாரணம் செய்தருளும் கருணாகடாக்ஷ மூர்த்தி.
881.   குலசக்ரபராயணா
தன்னை  ஆராதிக்கும் குல ஸாதகர்களின் குழாங்கள் தன் வித்யோபாஸன கார்யக் க்ரமங்கள் யாவற்றிலும், பர தேவதையாகத் தன்னை ஆராதிக்கப்புகு  முன்   தன் பரிவார தேவதைகளை ஆராதிப்பது அத்யாவஸ்யம் என்பதை உணர்ந்து அந்த தேவதைகள் நன்கு ஆராதிக்கப்பட்டு நன்றாக திருப்தி அடைந்ததைக் கண்ட பிறகே தனக்கு செய்யும் ஆராதன க்ரமங்களை ஏற்று மகிழும் பக்த பராதீன மூர்த்தி.
 882.   கூடஸ்தா
தன் வித்யா மூல மந்தரத்தின் யந்த்ரமாகிய சக்ர மேருவின் உச்ச சிகர ஸ்தானமாகிய பிந்துவே தன் யதாஸ்தானமாகக் கொண்டு அஸஞ்சலமாக அங்கேயே நிரந்தரமாக வாஸம்  செய்துக்கொண்டு அங்கே தன்னை நாடி வந்து அனன்யமாகச் சரணமடையும் உண்மையான த்ருட பக்தர்களை ஆட்கொண்டருளும்  பரதேவதை,
883.   கூடத்ருஷ்டி
தன் பக்தர்களை பரிபாலிப்பதில் அஸஞ்சலமான போக்கு உள்ள தீன ஸரண்ய பரதேவதை.
884.   குந்தலா
சக்ஷகம் எனப்படும் பான பாத்திரத்தில் தனக்கென்று  திராக்ஷை பழம் பேரீச்சம் பழம் இஞ்சி தேன், பசும்பால் கற்கண்டு, முதலிய பொருள்களின் சேர்க்கையால் தயாரிக்கப்பட்ட பான விசேஷத்தை அடிக்கடி ருசித்துப் பருகுவதில் பெரிதும் மகிழ்ச்சி கொள்பவள்.
885.   குந்தலாக்ரீதி:
தன் கேஸபாஸம்ஒரு கட்டுப்பாடும் இன்றி நாற்புறமும் சுழன்று வீசிப் பரவுவது போல் தானும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் யதேச்சையாக ஸஞ்சரிக்கும் இயல்பு உள்ளவள்.
886.   குஸலா

மஹா மங்கல மூர்த்தி.
887.   க்ருதிரூபா
க்ரியா  ஸக்தி  ஸ்வரூபிணீ.
888.   கூர்ச்சபீஜதரா
வித்யாராஜ்ஞீ  என்ற மந்த்ரதிலுள்ள இருபத்திரண்டு பீஜங்களில் ஒன்றாக கூர்ச்ச பீஜம் எனப்படும் “ஹூம்”   காரம் ஒரு பீஜமாக அமைந்த மூல மந்த்ர ஸ்வரூபிணீ.
889.  கூ:
எப்பொழுதும் எங்கும் எதிலும் “க்ரீம்” காரமாகிய தன் பீஜத்தின் ஒலி ஓட்டத்தில் தன் வித்யுத் ஸக்தியை ப்ரஸரிக்கச் செய்து அதனை வீர்யவத்தாக பிரயோகித்தே  பஞ்ச க்ருத்யம் செய்து இந்தப் பரந்த ப்ரபஞ்சத்தை நிர்வஹித்து அருள்பவள்.
890.   கும்கும் கும் கும் சப்த ரதா
ஸக்தி ஸிவ தத்துவத்தின் ப்ரதிபாதகமான “க”  கார  ” உ”  கார இணைப்பின் மீது பிந்து அதாவது அநுஸ்வாரம்   ஏறி அங்ஙனமாக அமைந்த அந்த பீஜம் “கும்” நான்கு முறை மடங்குவதால் உண்டாகும்  “கும் கும் கும் கும்” என்று உருவாகும் மொத்த கூட்டமைப்பானது,  காளிகையானவள், ஸவம் போல் செயலற்று கீழே கிடக்கும் மஹாகாலரின் ஹ்ருதய கமலத்தில் நின்று ஆனந்த நடனம் புரிந்து, அதாவது தன் வித்யுத் ஸக்தியை அவருடைய ஹ்ருதயத்தில் ப்ரஸரிக்கச் செய்து அவருக்கு மனதில் கரை புரண்டோடும் ஆனந்தமும் உத்ஸாஹமும் பெருக அருள் புரிந்து மகிழ்வதைக் குறிக்கிறது.
891.   க்ரூம் க்ரூம் க்ரூம் க்ரூம் பராயணா
கும் கும் கும் கும் என்ற கூட்டமைப்பின் அடங்கிய ஒவ்வொரு  “கும்” காரத்தினுடைய  ரேபம், அதாவது “ர” கார வ்யஞ்ஜன மாத்ருகை இணைவதால் உண்டாகும் “க்ரூம் க்ரூம் க்ரூம் க்ரூம்” என்ற கூட்டமைப்பானது ஸக்தி ஸிவ தத்துவத்தின் ப்ரதிபாதகமான “கும்” காரத்தின் ஒலி ஓட்டமானது அக்னி ஸக்தியின் ஆரோபணத்தால்  தடை இல்லா வீறு கொண்டு காளிகையின் வித்யுத் ஸக்தியானது உபாஸகனின்  புத்தியில் அமோகமான அதிர்வுடன் மின்னல் வேகமாகப் பாய்ந்து அவனது வித்யோபாஸன ப்ரயாசைகள் இலக்குத்தப்பாமல்  இஷ்ட தேவதையின் கருணா கடாக்ஷத்தின் வாயிலாக அதி சீக்கிரமே மந்த்ர ஸித்தி பெற்று அவன் நித்ய சுகம் அடைந்து ஸாந்த மூர்த்தியாகவும் ஜீவன் முக்தனாகவும் சிரஞ்ஜீவியாகவும் வாழப்பெறுவதைக் குறிக்கிறது.
892.    கும் கும் கும் ஸப்தநிலயா
ஸக்தி – ஸிவ தத்துவத்தின் ப்ரதிபாதகமான “கும்”  கார பீஜம்  மும்முறை மடங்குவதால் உண்டாகும் மொத்த கூட்டமைப்பானது,  காளிகையானவள் தானே அதனில் உறைந்து கொண்டு ஜீவாத்மா (பக்தன்)  பரமாத்மா (தான்) ப்ரபஞ்சம் ஆகிய முக்கூட்டின்  இணைந்த இயக்கத்தின் மூலமாக நிர்க்குணமும், நிர்லிப்தமுமான பரப்ரஹ்ம குணம் ஏற்று, ஸகுணமாக மாறி, தன் பக்தனாகிய ஜீவனைக்  கர்மம் ஜ்ஞானாநந்தம்  ஸாந்தி  ஆகிய முக்கூட்டின் ப்ரணாலியில் ஈடுபடுத்தி அவனை சீக்கிரமே ஜீவன் முக்தனாக ஆக அருள்வதைக் குறிக்கிறது.  
893.   குக்குராலயவாஸினி
தன் வித்யையாகிய வித்யாராஜ்ஞியின் ருஷியாகிய கால பைரவரே தன் அபரஸ்வரூபமாவதால் அவருடைய வ்யக்தியிலேயே தானே உறைந்து கொண்டு அவரை ஆராதிப்பவர்களைத் தன்னை நேரிட ஆராதித்தவர்களாகக் கொண்டு அவர்களை ஆட்கொண்டருளும் தன்மயத்வ ஸ்வரூபிணீ.
894.   குக்குராஸங்க ஸம்யுக்தா
கால பைரவருடைய ஸக்தியாகிய  காலபைரவியே தன் அபர ஸ்வரூப மாவதால் தன் உபாஸக மண்டலத்திற்கு கால பைரவியாகவே அதாவது குரு பத்னி யாகவே இயங்கி அநுக்ரஹிக்கும் தாதாத்ம்ய  ஸ்வரூபிணீ.
895.  குக்குரானந்தவிக்ரஹா
தானே நாத ப்ரஹ்ம ஸ்வரூபிணீ ஆவதால் உலகத்தில் எழும்பும் எல்லா த்வநிகளும் தன் ஸ்வரூபமாகக்  கொண்டவள்,  ஸர்வத்னிமயி
896.   கூர்ச் சாரம்பா
ஸ்ரீ மஹாகாலரின்  ஸாந்நித்யமும் ஸக்தியும் பூரணமாக அமர்ந்ததாகவும், ஸிவ தத்துவ ப்ரதிபாதகமானதாகவும் வித்யாராஜ்ஞீயில்  4ஆவது ,   5 ஆவது,   17ஆவது,    18 ஆவது பீஜங்களாக அமர்ந்துள்ள “ஹூம்” காரத்தின் ஒலி ஓட்டத்தின் மூலமாக தன் வித்யோ பாஸகர்களின் புத்தியில் தன் வித்யுத் ஸக்தியை முழுமையான வீர்யத்துடன் ப்ரஸரிக்கச் செய்து அவர்களின் முயற்சிகளும் செயல்பாடுகளும் ஸார்த்தமாகவும் சீக்கிரமாகவும் பூரண பலிதமடையச்  செய்து அவர்களை ஆட்கொண்டருளும் பராஸக்திமூர்த்தி.  
897.   கூர்ச்சபீஜா
பஞ்ச க்ருத்ய கலன செயல்பாடுகளில்  ஒரு பாங்காகிய ஸம்ஹாரம் செய்வதில்  ஸ்ரீ தேவி காளிகை ப்ரயோகிக்கும் ஒரு பீஜமாகிய “ஹூம்”  காரம் ஸிவ –  ஸக்தி  ப்ரதிபாதக பீஜமேயாம்.   அதனில் தன் ஸம்ஹார ஸக்தி அமர்ந்துள்ளதால் அதன் ஒலி ஓட்டத்தின் மூலமாகவே தன் வித்யோபாஸகர்களின் புத்திக்கு ஊரு விளைவிக்கும் அரிஷ்டவர்க்கங்களை அழித்தருளும்  விஸ்வாண்ட  ஸம்ஹாரமூர்த்தி.  
898.   கூர்சஜாபபராயணா
தாரா  என்றும்   கூர்ச்சம்  என்றும்  “தீர்க்கவர்ம” என்றும் சிறப்பித்துக் கூறப்படும் “ஹூம்”  கார பீஜத்தைத்  தனித்து  பிண்ட  மந்த்ரமாகவோ, இரட்டித்தோ, முக்கூட்டாகவோ வேறு பீஜங்களுடன் இணைந்த இதர மந்த்ரங்களாகவோ, இஷ்ட தேவதையை ப்ரேம பக்தியுடனும் அனன்ய ஸரணாகதி பாவத்துடனும் ஆழ்ந்து த்யானித்துக்கொண்டே லக்ஷக் கணக்கான ஆவ்ருத்தியாக ஜபித்து  அர்பணிக்கும் பக்தர்களை  ஆட்கொண்டு அவர்களுக்கு ஜீவன் முக்தி அளித்தருளும்  மந்த்ரமூர்த்தி.
899.   குசஸ்பர்ஸனஸந்துஷ்டா
இந்தப் பரந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லா  ஜீவர்களும் தன் குழந்தைகளாவதால், ஒரு சிசு பசி  மேலிட்டு ஸ்தன்ய  பானத்திற்காக தன்னை நோக்கி ஆவலாக ஓடி வந்து தன் மார்பகத்தை தொட்ட மாத்திரத்திலேயே, ஒரு தாய் தன் தாய்மை உணர்ச்சியின் வேகத்தால் ஆனந்த பரவசம்  அடைவது போல தன் பக்தர்கள் தன் மூல மந்த்ரத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே  தன் சிசுக்களாகிய அவர்கள்  மீது  எல்லை கடந்த அன்பைப் பொழிந்து அவர்களை ஆட்கொண்டு அருளும் ஜகன்மாதா.  
900.   குசாலிங்கன ஹர்ஷதா
ஒரு சிசு தன் தாயின் மார்பகத்தை ஆலிங்கணம் பண்ணிக்கொண்டே ஸ்தன்ய பானம் பண்ணுவதில் எப்படி மிகுந்த சந்தோஷம் அடைகிறதோ , அதே  போல் தன் குழந்தைகளாகிய தன் பக்தர்கள் தன் ஸ்வரூபத்தை த்யானித்துக் கொண்டே  தன் மந்த்ரத்தை ப்ரேம பக்தியுடன் ஜபித்துக்கொண்டு அளவில்லா மகிழ்ச்சி கொண்டு அவர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ப்ரஹ்மானந்தமும் ஜீவன் முக்தியும் அருளும் ஆனந்த மூர்த்தி.  
(அடுத்த பதிவில் தொடரும்)